‘பிள்ளைகளையாச்சும் படிக்க வைக்கலாம்னா, ஸ்கூல்ல சேர்க்கவே மறுக்கிறாங்க’- ஆதிகுடிகள் வேதனை

‘பிள்ளைகளையாச்சும் படிக்க வைக்கலாம்னா, ஸ்கூல்ல சேர்க்கவே மறுக்கிறாங்க’- ஆதிகுடிகள் வேதனை
‘பிள்ளைகளையாச்சும் படிக்க வைக்கலாம்னா, ஸ்கூல்ல சேர்க்கவே மறுக்கிறாங்க’- ஆதிகுடிகள் வேதனை

ஆதார் அட்டை இல்லாததால் குழந்தைகளைப் பள்ளியில் சேர்க்க முடியாமல் அவதியுறுவதாக ஆதிகுடிவாசிகள் சிலர் வேதனையுடன் புகார் தெரிவித்துள்ளனர். மாவட்ட நிர்வாகம் தலையிட்டு தங்களுக்கான அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என்று அவர்கள் கோரிக்கையும் வைக்கின்றனர்.

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் ஒன்றியத்திற்குட்பட்ட சின்னசெவலை என்ற கிராமத்தில் அரசுப் பள்ளி கட்டடம் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் அலுவலகம் ஆகிய பகுதியை ஒட்டி சுமார் மூன்று குடும்பங்கள் வசித்து வருகின்றனர். கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாகவே இந்தப் பகுதியில் வசித்து வரும் இவர்கள் ஆதிகுடியினராவர். `பெரிய மாட்டுக்காரர்கள்’ என்று அழைக்கப்படும் இவர்கள் பூம்பூம் மாட்டுக்காரர்கள் இன சமூகத்தை சார்ந்தவர்களாக பார்க்கப்படுகிறார்கள். இவர்களின் பிரதான தொழில் வீதி வீதியாக வீடு வீடாக சென்று மாடுகளை கொண்டு உதவி கேட்பதுதான். இவர்களின் தொழில் தற்போது வரை இருந்து வருகிறது. இவர்களிலேயே சில ஆண்கள் மட்டும் திருஷ்டி பொம்மைகள் தயாரிக்கிற தொழிலில் ஈடுபட்டு வீடு வீடாக சென்று திருஷ்டி பொம்மைகள விற்று கொண்டுவருகின்றனர். இவர்கள் பல ஆண்டு காலமாக நிரந்தரமான குடியிருப்பு இல்லாமல் கால் போன போக்கிலே தங்கி வாழ்ந்து வந்தனர்.

கடந்த 15 ஆண்டுகளாக விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அடுத்த சின்னசெவலை பகுதியில் வசித்து வருகிறார்கள். இந்த 3 குடும்பங்களைச் சேர்ந்த தம்பதியினருக்கும் இதுவரை நிலையான வீட்டுமனை கிடையாது; ஆதார் அட்டை கிடையாது; ரேஷன் அட்டை கிடையாது. ஆதார் கார்டு இல்லை இதனால் இந்த ஆதி குடிமக்கள் தங்களின் பிள்ளைகளை பள்ளிகளில் சேர்க்க இயலா சூழ்நிலை ஏற்பட்டு வருகிறது.

இதுகுறித்து அவர்களிடம் விசாரிக்கையில், இவர்களில் ஒருவரான அஞ்சலை என்கிற பெண், எட்டாம் வகுப்பு வரை படித்து இருப்பதாக நம்மிடம் தெரிவித்தார். தனது பிள்ளைகளைப் பள்ளியில் சேர்க்க சென்றபோது, தன்னிடம் ஆதார் அட்டை கேட்கப்பட்டதாகவும், தங்களுக்கு ஆதார் அட்டை எடுத்துத் தருவதற்கு யாரும் இல்லை என்றும் அவர்கள் தெரிவித்தார். தன்னைப் போன்றோரின் நிலையை அறிந்து, மாவட்ட நிர்வாகம் தலையிட்டு தங்களுக்கு இலவச மனைப்பட்டா மற்றும் ஆதார் வழங்கி தங்களுடைய பிள்ளைகளை காப்பாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார் அவர். இவரைப்போலவே அங்கிருந்த அனைவரும் நம்மிடையே கோரிக்கை வைத்தனர்.

ஒவ்வொரு நாளும் குடும்பத்திலுள்ள ஆண்கள் திருஷ்டி பொம்மைகள் விற்பதற்காக வெளியே சென்று வரும்போது 100, 200 மட்டுமே கொண்டு வருவதாகவும் அதை வைத்துக் கொண்டே தாங்கள் குடும்பம் நடத்துவதாகவும்; ஒரு நாளைக்கு இரண்டு வேளை கூட பட்டினி கிடந்து இரவு மட்டும் சாப்பிடுகிற நிலை கூட தங்களுக்கு இருப்பதாக தெரிவிக்கின்றனர் இந்த மக்கள். மாவட்ட நிர்வாகம் தலையிட்டு தங்களின் வாழ்வாதாரத்தை காக்க வேண்டும் என்பது தான் தங்களின் பிரதான கோரிக்கை இருப்பதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர். இது தொடர்பாக திருவெண்ணைநல்லூர் வட்டாட்சியர் பலமுறை தொடர்பு கொண்டும் அவர் எந்த பதிலும் அளிக்கவில்லை.

- ஜோதி நரசிம்மன்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com