டிஎன்பிஎஸ்சி குரூப்-4 காலிப்பணியிடங்கள் 9,882 ஆக அதிகரிப்பு
டிஎன்பிஎஸ்சி குரூப்-4 பணிக்கான காலிப்பணியிடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
2019 ஆம் ஆண்டு நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் நடைபெற்ற முறைகேடு தொடர்பாக, டிஎன்பிஎஸ்சி ஊழியர், பிற துறைகளைச் சேர்ந்தவர்கள், இடைத் தரகர்கள், முறைகேடாக தேர்வில் வெற்றி பெற்றவர்கள் எனப் பலரும் கைது செய்யப்பட்டு வருகின்றனர். முறைகேட்டில் ஈடுபட்ட 99 பேருக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்ட நிலையில், முறைகேடு தொடர்புடைய 39 பேருக்குப் பதிலாக புதிய தேர்ச்சிப் பட்டியலை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டு இருந்தது.
இந்நிலையில், காலிப்பணியிடங்களின் மொத்த எண்ணிக்கை 9,398இல் இருந்து 9,882 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 9,882 காலிப்பணியிடங்களுக்கான கலந்தாய்வு நடைபெறவுள்ள தேதிகள் விரைவில் வெளியிடப்படும் எனவும் காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை அதிகமாவதும், குறைவதும் வழக்கமான ஒன்றுதான் என்றும் டிஎன்பிஎஸ்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.