
தமிழகத்தில் 22 லட்சம் பேர் எழுதும் குரூப் 4 தேர்வு நாளை மறுநாள் நடைபெறுகிறது.
தமிழ்நாடு அரசில் காலியாக உள்ள இளநிலை உதவியாளர், தட்டச்சர், அலுவலக உதவியாளர், கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட குரூப் 4 பதவிகளில் காலியாக உள்ள 7,301 இடங்களை நிரப்புவதற்கான தேர்வு நாளை மறுநாள் நடைபெறுகிறது. நாளை மறுநாள் காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரை, கட்டாய தமிழ் மொழி தகுதி & மதிப்பீட்டுத் தேர்வு, பொது அறிவு, திறனறி பகுதி என்று மொத்தம் 300 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெற உள்ளது.
தேர்வர்கள் காலை 8.30 மணிக்குள்ளாக தேர்வு மையங்களுக்கு வந்துவிட வேண்டும் என்றும், முகக்கவசம் கட்டாயம் என்றும், ஹால் டிக்கெட், புகைப்படம், பேனா தவிர வேறு எதையும் எடுத்துவரக்கூடாது என்றும், முறைகேட்டில் ஈடுபட்டால் தேர்வு எழுத வாழ்நாள் தடை விதிக்கப்படும் என்றும் TNPSC தெரிவித்துள்ளது.
மாநிலம் முழுவதும் 7,689 மையங்களில் நடைபெறும் தேர்வை 22,02,942 பேர் எழுத உள்ளதாக TNPSC தெரிவித்துள்ளது. 9,35,354 ஆண்கள், 12,67,457 பெண்கள், 131 3-ம் பாலினத்தவர்கள் என்று 22,02,942 பேர் தேர்வை எழுதுகின்றனர். இதில் 27,449 மாற்றுத்திறனாளிகள், 12,644 விதவைகள், 6,635 முன்னாள் ராணுவத்தினரும் அடங்குவர்.
முறைகேடுகளைத் தவிர்க்க 1,10,150 தேர்வறை கண்காணிப்பாளர்கள், 7,689 கண்காணிப்பு அலுவலர்கள், 1,932 நடமாடும் கண்காணிப்பு படைகள், 534 பறக்கும் படையினர், 7,689 ஒளிப்பதிவாளர்கள், 7,689 சிசிடிவி ஆபரேட்டர்கள் தேர்வுப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். சென்னையைப் பொறுத்தவரை, 503 மையங்களில் நடைபெறும் தேர்வை 1,56,218 பேர் எழுத உள்ளனர்.