“மக்களிடம் நன்மதிப்பை பெற என் மீது பொய்க் குற்றச்சாட்டுகள்” - சரணடைந்த ஜெயக்குமார் மனு
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முறைகேட்டில் தனக்குத் தொடர்பில்லை என்று சரணடைந்த ஜெயக்குமார் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார்.
டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேட்டில் தேடப்பட்டு வரும் முக்கிய குற்றவாளியான இடைத்தரகர் ஜெயக்குமாரின் மோசடிக் கரம் பள்ளிக் கல்வித்துறை வரை நீண்டிருப்பதாக அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகின. பள்ளிக் கல்வித்துறை அதிகாரி ஒருவருடன் ஜெயக்குமாருக்கு நெருங்கிய தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது.
ஜெயக்குமாரை கைது செய்தால் மட்டுமே இந்த விவகாரத்தில் புதைந்து கிடக்கும் உண்மைகளை வெளிக்கொண்டுவர முடியும் என்பதால் அவரைத் தேடி கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திர மாநிலங்களுக்கு சிபிசிஐடி தனிப்படை விரைந்தது.
இதனிடையே இடைத்தரகர் ஜெயக்குமார் சென்னையில் உள்ள சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். டிஎன்பிஎஸ்சி குரூப் 4 முறைகேட்டில் ஈடுபட்ட ஜெயக்குமாரை பிடித்து கொடுப்பவருக்கு சன்மானம் கொடுக்கப்படும் என்று காவல்துறை தரப்பில் விளம்பரம் செய்யப்பட்ட நிலையில் அவரே நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். ஜெயக்குமார் சரணடைந்துள்ளதால் டி.என்.பி.எஸ்.சி. தேர்வு முறைகேட்டில் பல உண்மைகள் வெளிவரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முறைகேட்டில் தனக்குத் தொடர்பில்லை என்று சரணடைந்த ஜெயக்குமார் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார்.
மேலும், அந்த மனுவில், “சிபிசிஐடி காவல்துறையினர் உள்நோக்கத்துடன் தனது புகைப்படத்தை ஊடகங்களில் வெளியிட்டு அவதூறு பரப்புகின்றனர். எந்த ஆதாரமும் இல்லாமல் தன் பெயரைக் கெடுக்கும் நோக்கில் இந்த வழக்கில் காவல்துறை செயல்படுகிறது. மக்களிடம் நன்மதிப்பை பெற, பொய்க் குற்றச்சாட்டுகளை காவல்துறை சுமத்தியுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.