முறைகேடு புகார்: டாப் லிஸ்டில் வந்தவர்களுக்கு மறுதேர்வு நடத்தியதா டிஎன்பிஎஸ்சி?
குரூப் 4 மற்றும் குரூப் 2ஏ தேர்வு முறைகேடு தொடர்பாக ஆஜரான தேர்வர்களுக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மறுதேர்வு நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குரூப் 4 மற்றும் குரூப் 2ஏ தேர்வில் முறைகேடு நடைபெற்றதாக புகார்கள் எழுந்த நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம், கீழக்கரை தேர்வு மையங்களில் தேர்வு எழுதி மாநில அளவில் முதல் 100 இடங்களில் தேர்ச்சி பெற்ற 57 பேருக்கு டி.என்.பி.எஸ்.சி. சம்மன் அனுப்பியிருந்தது. அதில் 20 பேர் விசாரணைக்காக டி.என்.பி.எஸ்.சி அலுவலகத்தில் நேரில் ஆஜரானார்கள். அதேபோல், முறைகேடு புகார் தொடர்பாக 2017-ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட குரூப் 2ஏ தேர்வு தரவரிசையில் முன்னிலை பெற்றவர்களும் ஆஜராகினர்.
அவர்களிடம் டி.என்.பி.எஸ்.சி. தலைவர் சுதன், செயலாளர் நந்தகுமார் மற்றும் தேர்வாணைய உறுப்பினர்கள் விசாரணை மேற்கொண்டனர். தேர்வில் முதலிடம் பிடித்த சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த திருவராஜூவும் ஆஜரானார். விசாரணைக்கு பிறகு ஆஜரான தேர்வர்களுக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மறுதேர்வு நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் ராமேஸ்வரம், கீழக்கரை ஆகிய மையங்களில் தேர்வு எழுதி தேர்ச்சி பெறாத மாணவர்களையும் அழைத்து, தேர்வு மையங்களில் ஏதேனும் முறைகேடு நடந்ததா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்றதாக கூறப்படுகிறது.