‘தமிழ்நாட்டில் தாழ்ந்த சாதி எது?‘- வினாத்தாள் சர்ச்சையில் உரிய நடவடிக்கை என விளக்கம்

‘தமிழ்நாட்டில் தாழ்ந்த சாதி எது?‘- வினாத்தாள் சர்ச்சையில் உரிய நடவடிக்கை என விளக்கம்
‘தமிழ்நாட்டில் தாழ்ந்த சாதி எது?‘- வினாத்தாள் சர்ச்சையில் உரிய நடவடிக்கை என விளக்கம்

கல்லூரி தேர்வு வினாத்தாளில் சாதியை குறிப்பிட்டு கேட்கப்பட்டிருந்த கேள்வியில், தவறிழைத்தோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உயர்க்கல்வித்துறை அறிக்கை வழியாக தெரிவித்துள்ளது.

சேலம் பெரியார் பல்கலைக்கழகம் மற்றும் பல்கலைக்கழகத்துடன் இணைவுபெற்ற கல்லூரிகள் ஆகியவற்றில் தற்போது இரண்டாம் பருவ தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. பெரியார் பல்கலைக்கழக துறைகளில் சுமார் 2,500 மாணவர்களும், இணைவுபெற்ற கல்லூரிகளில் 1.5 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்களும் உயர்கல்வி பயின்று வருகின்றனர். இதில், இளநிலை மற்றும் முதுநிலை முதலாமாண்டு, இரண்டாமாண்டு மற்றும் மூன்றாமாண்டு மாணவர்களுக்கு இரண்டாம் செமஸ்டர் பருவ தேர்வுகள் நடைபெற்று வருகின்றன.

இதில், நேற்று நடந்த தேர்வு வினாத்தாளில் 11-வது கேள்வியாக `மஹர், நாடார், ஈழவர், அரிஜன்’ ஆகிய சமூக பிரிவுகளை குறிப்பிட்டு, `இவற்றுள் தமிழ்நாட்டில் உள்ள தாழ்ந்த சாதி எது?’ என்ற கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் சுதந்திர போராட்ட இயக்கங்கள் 1880-ம் ஆண்டு முதல் 1947-ம் ஆண்டு வரை என்கிற தலைப்பில் கேள்வி இடம் பெற்றுள்ளது. இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சர்ச்சைக்கு பதிலளித்துள்ள பெரியார் கல்வி துணைவேந்தர் ஜெகந்நாதன், `நேற்று நடந்த முதுகலை வரலாறு இரண்டாம் ஆண்டு தேர்வில் கேட்கப்பட்ட இக்கேள்வி குறித்து விரைந்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும். இந்த வினாத்தாள், பிற பல்கலைக்கழக கல்லூரிகளில் பணியாற்றும் பேராசிரியர்களால் தயார் செய்யப்பட்டதாகும்’ என்றுள்ளார்.

இந்நிலையில் இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து தமிழக அரசின் உயர்க்கல்வித்துறை சார்பில் அறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், “சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் முதுகலை வரலாறு பாடப்பிரிவுக்கு நடத்தப்பட்ட பருவத்தேர்வில் சாதியை குறித்து கேள்வி கேட்கப்பட்டுள்ளது குறித்து பல்வேறு ஊடகங்களில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இக்கேள்வி இடம்பெற்றது குறித்து உயர்க்கல்வித்துறை உயர் அலுவலர் நிலையில் குழு அமைக்கப்பட்டு உரிய விசாரணை மேற்கொண்டு அந்த விசாரணை அறிக்கையின் அடிப்படையில் தவறு செய்தவர்கள் மீது தகுந்த நடவடிக்கை துறை மூலமாக எடுக்கப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு முதன்மை செயலாளர் பெயரில் இந்த அறிக்கை வெளியாகியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com