11,12-ஆம் வகுப்பில் மொழிப் பாடங்களுக்கு 2 தேர்வுகள் கிடையாது: தமிழக அரசு
11 மற்றும் 12-ஆம் வகுப்பு மொழிப்பாடத் தேர்வுகளில் இனி 2 தாள்கள் கிடையாது. ஒரே தாள் தேர்வு மட்டுமே நடைபெறும் என தமிழக அரசு அசாரணை வெளியிட்டுள்ளது.
11 மற்றும் 12-ஆம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வுகளில் மொழிப்பாடம் மற்றும் ஆங்கிலப் பாடங்களில் இரண்டு தாள்களாக தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அதவாது தமிழ் முதல் தாள், தமிழ் இரண்டாம் தாள், ஆங்கிலம் முதல் தாள், ஆங்கிலம் இரண்டாம் தாள் என தேர்வு நடத்தப்படும். பின்னர் இரண்டு மதிப்பெண்களும் கூட்டப்பட்டு அது நூற்றுக்கு கணக்கிடப்பட்டு அந்தந்த பாடங்களுக்கான மதிப்பெண்கள் வழங்கப்படும். இந்நிலையில் இதற்கு பதிலாக இவற்றை ஒருங்கிணைத்து ஒரே தாளாக தேர்வு நடத்தப்படும் என தமிழக அரசு அரசாணையை வெளியிட்டுள்ளது.
இதன் மூலம் தேர்வுகளின் எண்ணிக்கை 8இல் இருந்து 6ஆக குறைவதோடு, மாணவர்களுக்கு ஏற்படும் மன அழுத்தமும் பெரிதும் குறையும் என அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்வு முறை இந்தக் கல்வியாண்டில் இருந்தே பின்பற்றப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.