கொரோனா சவால்களை எதிர்கொண்ட பின் 'நீட்' ரத்துக்கு வலியுறுத்தப்படும்: கனிமொழி எம்.பி.
கொரோனா சவால்களை எதிர்கொண்ட பின்னர், நீட் தேர்வு ரத்து குறித்து வலியுறுத்தப்படும் என கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி வந்த நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினர் கனிமொழி இன்று விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறும்போது, "தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றதும் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்கு துரித நடவடிக்கைகளை எடுத்துள்ளார். அதன்படி, ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு கடைப்பிடிக்கப்படுகிறது. தமிழகத்திற்கு கூடுதலாக நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகளும், தடுப்பூசிகளையும் கொடுக்க வலியுறுத்தி மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
அதேபோல கொரோனா பாதிப்புக்கு தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றாலும் கூட, அதற்காகும் மருத்துவச் செலவை தமிழக அரசே ஏற்கும் என அறிவிப்பும் வெளியிட்டுள்ளார். கொரோனா நோய் பாதிப்புக்கு உள்ளானவர்களின் விரிவான சிகிச்சைகளுக்காக கூடுதல் படுக்கை வசதிகளை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தேவைப்படும் பட்சத்தில் திருமணம் மண்டபங்களையும் கொரோனா சிகிச்சை மையங்களாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். ஆனால் அத்தகைய தேவை ஏற்படாத வண்ணம் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. நாமும் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.
சட்டமன்றத்திலும் நாடாளுமன்றத்திலும் ஆங்கிலோ இந்தியருக்கு வழங்கப்பட்டு வந்த பிரதிநிதித்துவ இருக்கை ரத்து செய்யப்பட்டது குறித்து முதலமைச்சரின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்படும். இல்லையென்றால் நானே அது குறித்து முதலமைச்சரின் கவனத்திற்கு எடுத்துச் செல்வேன். அவர்களது கோரிக்கைகளையும் என்னவென்று அறிந்து நிறைவேற்றுவதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
பரவும் கொரோன நோயை கட்டுப்படுத்துவதற்கும், அதை தடுப்பதற்கும் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளை ஆய்வு செய்வதற்கும் முதலமைச்சரின் உத்தரவுப்படி, ஒவ்வொரு அமைச்சருக்கும் மாவட்டங்கள் ஒதுக்கப்பட்டு தடுப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்யும் பணி வழங்கப்பட்டுள்ளது.
நிச்சயமாக அவர்கள் அரசின் பணிகளை துரிதப்படுத்தி நோயை கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகளை எடுப்பார்கள். கொரோனா நோய் குறித்தான சவால்களை எதிர்கொண்ட பின்னர், நீட் தேர்வு ரத்து செய்வது குறித்து மத்திய அரசிடம் நிச்சயம் வலியுறுத்துவோம்” என்றார் கனிமொழி எம்.பி.