சிபிஎஸ்இ பாடத்தில் புரோகிதர் போல் திருவள்ளுவர்: வைரமுத்து கண்டனம், தஞ்சையில் ஆர்ப்பாட்டம்
சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் சர்ச்சைக்குரிய வகையில், காவி உடையுடன் புரோகிதர் போல் திருவள்ளுவரின் படம் இடம்பெற்றதற்கு வைரமுத்து கண்டனம் தெரிவித்துள்ளார். திருவள்ளுர் படத்தின் சித்தரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து தஞ்சையில் இந்தியமாணவர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
இது தொடர்பாக வைரமுத்து வெளியிட்டிருக்கும் ட்வீட்டில் “உலகப் பொதுமறை திருக்குறள்; உலகப் பொதுமனிதர் திருவள்ளுவர். அவருக்கு வர்ண அடையாளம் பூசுவது தமிழ் இனத்தின் முகத்தில் தார் அடிப்பது போன்றது. ஏற்றுக்கொள்ள முடியாது. திருத்துங்கள்; இல்லையேல் திருத்துவோம்” என தெரிவித்திருக்கிறார்.
சிபிஎஸ்இ எட்டாம் வகுப்பு பாட புத்தகத்தில் திருவள்ளுவரை புரோகிதர் போல் சித்தரித்து ஆரிய அவதாரம் பூசி திருவள்ளுவரை இந்து மதத்திற்க்குள் அடக்க மத்திய அரசு முயற்சிப்பதாக தெரிவித்து, தஞ்சை இரயில் நிலையம் அருகே இந்திய மாணவர் சங்கத்தின் மாநில செயலாளர் மாரியப்பன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பி மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பிரதமர் மோடி ஒரு புறம் திருக்குறளை மேற்கோள் காட்டியும், மறுபுறம் திருவள்ளுவரை இந்து மதத்திற்குள் அடக்க முயற்சிப்பதாக குற்றம் சாட்டிய மாணவர் அமைப்பினர், உடனடியாக இத்தகைய முயற்சிகளை மத்திய அரசு கைவிடவில்லை எனில், இந்தியா முழுவதும் போராட்டத்தை தீவிரப்படுத்துவோம் என எச்சரித்தனர். எச்சரித்ததோடு பாடத்திட்டத்தில் உள்ள புகைப்படத்தை உடனடியாக நீக்கவேண்டும் என கோரி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.