நீட் தேர்வு முடிவு நேற்று வெளியான நிலையில் அதன் புள்ளிவிவரங்களில் குளறுபடி இருப்பது தெரியவந்துள்ளது.
கொரோனா அச்சுறுத்தலுக்கு இடையில் கடந்த மாதம் நீட் தேர்வு நடைபெற்றது. அப்போது தேர்வை எழுத முடியாதவர்களுக்கு கடந்த 12 ஆம் தேதி வாய்ப்பு வழங்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து நேற்று மாலை 4 மணிக்கு நீட் தேர்வு முடிவு வெளியானது. இதில் பல்வேறு மாணவர்கள் தேர்ச்சி அடைந்தனர். தமிழகத்தை பொருத்தவரை, 57.44% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இந்நிலையில், நீட் தேர்வு முடிவுகளில் பல்வேறு குளறுபடிகள் நடைபெற்றுள்ளது தெரியவந்துள்ளது. அதாவது, தெலங்கானாவில் 50,392 பேரில், 1,738 பேர் பாஸ் ஆன நிலையில் தேர்ச்சி விகிதம் 49.15 % என அறிவிக்கப்பட்டுள்ளது. திரிபுரா மாநிலத்தில் 3,536 பேர் தேர்வு எழுதிய நிலையில் 88,889 பேர் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டுள்ளது.
உத்தரகாண்ட் மாநிலத்தில் 12,047 பேர் தேர்வெழுதிய நிலையில் தேர்ச்சி பெற்றது 37,301 பேர் என அறிவிக்கப்பட்டுள்ளது. உத்தரபிரதேசத்தில் 156992 பேர் தேர்வு எழுதிய நிலையில் 7323 பேர் தேர்ச்சி என்றும், தேர்ச்சி விகிதம் 60.79 % என்றும் தவறான புள்ளிவிவரம் வெளியாகியுள்ளது. ப்ரிண்டிங் தவறால் இந்த குளறுபடி ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் சரியான மறு அறிக்கையை வெளியிட தேசிய தேர்வு முகமை நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.