முதல் தலைமுறை பட்டதாரிகளின் வேலையின்மையால் பறிபோகும் நரிக்குறவர் மாணவர்கள் எதிர்காலம்

முதல் தலைமுறை பட்டதாரிகளின் வேலையின்மையால் பறிபோகும் நரிக்குறவர் மாணவர்கள் எதிர்காலம்

முதல் தலைமுறை பட்டதாரிகளின் வேலையின்மையால் பறிபோகும் நரிக்குறவர் மாணவர்கள் எதிர்காலம்
Published on

முதல் பட்டதாரி மாணவர்களுக்கு வேலை வேலை கிடைக்காததால் நரிக்குறவர் சமூக இளம் மாணவர்கள் தொடர்ந்து கல்வி கற்பதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் தங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க நரிக்குறவர் சமூக பட்டதாரி இளைஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட மானாமதி ஊராட்சியில் நரிக்குறவ மக்கள் வாழும் பகுதி உள்ளது. இங்கு, 150-க்கும் மேற் பட்ட வீடுகளில் 500-க்கும் மேற்பட்ட நரிக்குறவ மக்கள் வசித்து வருகின்றனர். இச்சமூக இளைஞர்கள் பல்வேறு பாடப் பிரிவுகளில் பட்டம் பெற்றுள்ளனர். அரசு தங்கள் சமூக இளைஞர்களுக்கு போதிய வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தர வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நரிக்குறவ மக்களின் பிரதான தொழில் மற்றும் பாரம்பரிய தொழிலாக கருதப்படுவது வேட்டையாடுவது மட்டும்தான். ஆனால் வேட்டை யாடுவதை அரசு தடை செய்துள்ளது. வேறு தொழில்களை கற்பதற்கான வாய்ப்பு, வசதிகளை அரசு ஏற்படுத்தி தரவில்லை. பாரம்பரியமாக வைத்துள்ள துப்பாக்கிகளுக்கு உரிமம் பெற அரும்பாடுபட்டு பிழைப்பு நடத்தி வருகிறார்கள். மேலும் மீன்பிடி காலங்களில் மீனவர்களுக்கு உதவித்தொகை வழங்குவது போல் எங்களுக்கும் உதவித்தொகை வழங்க வேண்டும் என்கின்றனர் இவர்கள்.

இந்நிலையில் இந்த குடியிருப்பில் பட்டப்படிப்பு பயின்ற மாணவர்கள் பேசுகையில், “எங்களை போன்ற பட்டப்படிப்பு முடித்த பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்காததால், எங்களுக்கு பிறகு உள்ள பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப எங்கள் சமூக பெற்றோர்கள் மறுப்பு தெரிவிக்கும் நிலை உள்ளது. அரசு இதை சரிசெய்ய வேண்டும். மேலும் நரிக்குறவ சமூகத்தினர் அரசு சலுகைகளை பெறுவதற்கு பழங்குடியின பிரிவில் சேர்க்க வேண்டும். தற்போது எங்களை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் சேர்த்துள்ளதால் இச்சமூக பட்டதாரி இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு வேலைவாய்ப்பில் உரிய சலுகை கிடைப்பதில்லை” என வேதனையுடன் தெரிவித்தனர்.

தொழிற்சாலைகள் நிறைந்த காஞ்சிபுரம் மாவட்டத்தில் நரிக்குறவர் சமூகத்தில் முதல் தலைமுறை பட்டதாரிகளாக உள்ள இந்த படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்காமல் இருப்பது, இச்சமூகத்தின் அடுத்த தலைமுறையினருக்கு கல்வி கிடைப்பதில் சிக்கல் ஏற்படுகிறது. இவர்களின் பெற்றோர்கள், ‘மிகவும் சிரமப்பட்டு படிக்க வைத்த எங்கள் பிள்ளைகளுக்கு எந்த ஒரு வேலையும் கிடைக்காத நிலை தற்போது உள்ளது. அதனால் இவர்களுக்கு எந்த ஒரு கைத்தொழிலும் தெரியவில்லை. பிறகு எதற்காக பிள்ளைகளை படிக்க வைக்க வேண்டும்? எங்கள் பிள்ளைகளுக்கு எங்கள் குல தொழிலை சிறுவயதிலிருந்தே கற்றுக்கொடுத்தால், பிற்காலத்தில் அவர்களை வைத்தாவது பிழைத்துக் கொள்வார்கள். இதனால் பள்ளிக்குச் சென்று கொண்டிருந்த சில பிள்ளைகளுடைய படிப்பை பாதியில் நிறுத்தி விட்டோம்’ என கூறுகிறார்கள்.

இப்பகுதியை சேர்ந்த சிவா என்ற முதல் பட்டதாரி நம்மிடையே பேசுகையில், “நரிக்குறவர் சமூகத்தை சேர்ந்த நாங்கள், தற்போது தான் அரசு வேலைக்கு விண்ணப்பம் செய்து வருகிறோம். எங்களுக்கு என்று இட ஒதுக்கீடு என ஏதும் இல்லாத காரணத்தினால், எங்கள் அரசு வேலைகள் அனைத்தும் பறிபோகிறது. என் விஷயத்தில்கூட, காவல் துறையில் எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்று உடல் தகுதி தேர்வின்போது ஒரு இன்ச் குறைவாக இருந்த காரணத்தினால் அந்த வேலை கிடைக்காமல் போனது. இதுவே எங்களுக்கு என்று இட ஒதுக்கீடு இருந்தால் அந்த வேலை கிடைத்திருக்கும். எங்கள் கிராமத்தில் மட்டும், 16 பேர் பட்டதாரியாக உள்ளோம். காஞ்சிபுரம் மாவட்டம் தொழிற்சாலை நிறைந்த மாவட்டம். ஆனால் அங்கும் நாங்கள் வேலை கேட்டுச் சென்றால் ஒப்பந்த ஊதியத்தில் மட்டுமே பணி அமர்த்துகிறார்கள். ஆறு மாதம் ஒரு வருடம் கழித்து வேலையை விட்டு வெளியேற்றுகிறார்கள். இதனால் மீண்டும் எங்களுடைய குல தொழிலான ஊசிமணி விற்பனைக்கும் பிற சிறு சிறு தொழிலுக்கும், படித்த இளைஞர்களாகிய நாங்கள் தள்ளப்படுகிறோம்” என்றார் வேதனையுடன்.

மூர்த்தி என்ற நரிக்குறவர் சமூக பஞ்சாயத்து தலைவர் பேசுகையில், “ஊசிமணி பாசிமணி விற்று எங்கள் பிள்ளைகளை நாங்கள் கஷ்டப்பட்டு படிக்க வைத்தோம். எங்களைப்போல் கல்வியறிவு இல்லாமல், போதிய விழிப்புணர்வு இல்லாமல், மழையிலும் வெயிலிலும் அல்லல்படாமல் ஒரு நல்ல வேலையில் அவர்கள் சென்று அமர்வார்கள் என்கின்ற நோக்கத்திலேயே அவர்களையெல்லாம் நாங்கள் மிகவும் சிரமப்பட்டு நன்றாக படிக்க வைத்தோம். எங்கள் நிலையை உணர்ந்து, பிள்ளைகளும் நன்றாக படித்து இன்ஜினியர் - அக்ரி டிப்ளமோ என படித்திருக்கிறார்கள். ஆனால் தற்போது படித்தும் ஒரு பிரயோஜனமும் இல்லை. எங்கள் பிள்ளைகளுக்கு நிரந்தரமாக எங்கேயும் வேலை கிடைப்பதில்லை.

12 வருடங்களுக்கு மேலாக பிள்ளைகளை படிக்க வைத்து அதன் பிறகு கல்லூரிக்கு அனுப்பி அதற்கு உண்டான அனைத்து பொருட் செலவுகளையும் மேற்கொண்டு பிள்ளைகளை படிக்க வைத்தாலும், அதற்கு உண்டான பலன் என்பது எதுவும் இல்லை வேலை கிடைக்காத காரணத்தினால் எந்த ஒரு தொழிலையும் கற்றுக் கொள்ள இயலாமல் தற்போது வீட்டிலேயே எல்லாரும் முடங்கி போய் இருக்கிறார்கள். படித்த பிள்ளைகளுக்கு வேலை கிடைத்தால்தானே, அடுத்த தலைமுறை குழந்தைகளை படிக்க வைக்க எல்லோரும் முன்வருவார்கள்... ஆனால் படித்த பிள்ளைகளுக்கு எங்கும் வேலை கிடைக்காத காரணத்தினால், அடுத்த தலைமுறை பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்கள் தயக்கம் காட்டுகிறார்கள். அதனால் இறுதி முயற்சியாக, எங்கள் பிள்ளைகளுக்கு நாங்களே கைத்தொழிலை கற்றுக் கொடுத்து அவர்கள் வாழ்வில் சுயதொழில் மூலம் சம்பாதித்து முன்னேறுவதற்கு உண்டான வழிவகையை மேற்கொள்ள தற்போது தொடங்கி உள்ளோம். இதனால் பெரும்பாலான பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புவதை நிறுத்தி விட்டோம்” என்றார்.

ஜெரினா என்ற மூன்று பட்டதாரி பிள்ளைகளின் தாய் பேசுகையில், “என் குடும்பத்தில் 4 பிள்ளைகளும் படித்து பட்டதாரியாக உள்ளனர். இளைய மகன் தற்போது பத்தாம் வகுப்பு படித்து முடித்து உள்ளான். ஆனால் ஒரு பிள்ளைக்கு கூட நிரந்தரமாக எங்கேயும் வேலை இல்லை. யாரும் வேலை கொடுக்க முன்வரவில்லை. இவர்கள் வேலை தேடி சென்றாலும் கிடைப்பதில்லை. இதனால் தற்போது எங்கள் குல தொழிலான ஊசிமணி பாசிமணி கோர்ப்பது உண்டான தொழிலை அவர்கள் கற்று வருகிறார்கள். எங்கள் சமுதாயத்தை பழங்குடியினர் பட்டியலில் சேர்த்தால் மட்டுமே எங்கள் சமுதாயம் முன்னேறும். எனவே தமிழக அரசு எங்கள் சமூகத்தை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க ஆவண செய்ய வேண்டும்” என்று அரசிடம் கோரிக்கை வைக்கிறார்.

இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகத்தை தொடர்பு கொண்டு கேட்கும்பொழுது தனியார் தொழிற்சாலையில் இருந்து வேலைவாய்ப்பு முகாம் ஏற்படுத்தி தகுதிவாய்ந்த நபர்களுக்கு வேலை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கூறப்பட்டது.

பிரசன்னா

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com