7.5% உள் இடஒதுக்கீட்டின் கீழ் சேரும் மாணவர்களிடம் கட்டணம் வசூலித்தால் அங்கீகாரம் ரத்து

7.5% உள் இடஒதுக்கீட்டின் கீழ் சேரும் மாணவர்களிடம் கட்டணம் வசூலித்தால் அங்கீகாரம் ரத்து
7.5% உள் இடஒதுக்கீட்டின் கீழ் சேரும் மாணவர்களிடம் கட்டணம் வசூலித்தால் அங்கீகாரம் ரத்து
பொறியியல் படிப்புகளில் 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டின் கீழ் சேரும் அரசுப் பள்ளி மாணவர்களிடம் கட்டணம் வசூலித்தால் கல்லூரியின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என தொழில்நுட்ப கல்வி இயக்ககம் எச்சரித்துள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள 440 பொறியியல் கல்லூரிகளில் முதலாமாண்டு B.E., B.Tech., படிப்புகளில் சேருவதற்கான கலந்தாய்வு ஆன்லைனில் நடைபெற்று வருகிறது. முன்னதாக அரசுப்பள்ளி மாணவர்களுக்கான 7.5% உள் இட ஒதுக்கீட்டின் கீழ் சேர்க்கை பெற்று, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ-மாணவிகளிடம் அரசின் உத்தரவையும் மீறி கல்விக் கட்டணம், விடுதிக் கட்டணம் வசூலிக்கப்படுவதாக தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்துக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன. இதையடுத்து, கட்டணம் ஏதும் வசூலிக்கக் கூடாது என தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் எச்சரிக்கை விடுத்திருந்த போதிலும், ஒரு சில கல்லூரிகளில் கட்டணம் வசூல் செய்யப்படுவதாக மீண்டும் புகார்கள் வந்தன.
இந்நிலையில் 7.5 சதவீத உள் இட ஒதுக்கீட்டின் கீழ் சேரும் மாணவர்களின் கட்டணத்துக்கான தொகை அரசால் விடுவிக்கப்படும் என்றும், விரைவில் இதற்கான அரசாணை வெளியிடப்படும் எனவும் தொழில்நுட்ப கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது. இதை மீறி மாணவர்களிடமிருந்து கட்டணம் வசூலித்தால் கல்லூரிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் கழகம் மற்றும் அண்ணா பல்கலைக்கழகத்துக்கு பரிந்துரைக்கப்படும் என தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் லட்சுமி பிரியா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com