”தமிழகத்தில் மாநில கல்விக் கொள்கை உருவாக்க திட்டமிட்டுள்ளோம்”- அமைச்சர் அன்பில் மகேஷ்
நேற்றைய தினம் திருச்சியில் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவொன்றில், தேசிய கல்விக்கொள்கையின் சிறப்பம்சம் குறித்து தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியிருந்த நிலையில், இன்றைய தினம் திருச்சியில் பள்ளியொன்றில் “தமிழகத்தில் மாநில கல்விக்கொள்கையை உருவாக்கும் திட்டம் முதல்வர் ஸ்டாலினுக்கு உள்ளது. அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது” என தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
திருச்சி மாவட்டம் மணிகண்டம் ஒன்றியத்திலுள்ள மாதிரி பள்ளியொன்றை சேர்ந்த 12-ம் வகுப்பு மாணவர்கள் 80 பேருக்கு கையடக்கக் கணினியினை (டேப்லட்) பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாணவர்கள் மத்தியில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசுகையில், "இந்தியாவில் உள்ள தலைசிறந்த கல்வி நிறுவனங்களில் அரசு பள்ளி மாணவர்கள் சேர்ந்து படிக்க வேண்டும். அதற்காக மாணவர்களை ஊக்கப்படுத்த, மாதிரி வகுப்புகள் நடத்தப்படுகிறது; கையடக்க கணினிகளும் கொடுக்கப்படுகிறது. இதை உணர்ந்து மாணவர்கள் முழு கவனத்துடன் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும். கல்வியில் தமிழக அரசுக்கும் முதல்வருக்கும் பெருமை தேடித்தர வேண்டும்.
சமீபத்தில் மணப்பாறையை சேர்ந்த அரசு பள்ளி மாணவர் அருண்குமார் என்பவர் சிறப்பாக படித்து கல்லூரி வாயிலை நாடியிருந்தார். கல்லூரியிலும் அவருடைய முழு கல்வி செலவையும் அரசு ஏற்றுக் கொண்டுள்ளது. இதுபோல அனைத்து மாணவர்களும் சிறப்பாக படித்து மேலே வரவேண்டும். அனைத்து மாணவர்களின் செலவுகளையும் தாயுள்ளத்தோடு அரசு ஏற்கும்.
படிப்பில் கவனம் செலுத்தும் அதேநேரத்தில், மாணவர்கள் பயணத்திலும் கவனம் செலுத்த வேண்டும். காலை, மாலை நேரங்களில் பள்ளி மாணவர்கள் பேருந்துகளில் ஆபத்தான பயணங்களை மேற்கொள்ள கூடாது. சில இடங்களில் கூடுதலாக பேருந்துகள் இயக்க வேண்டும் என்கிற கோரிக்கை பள்ளி நிர்வாகிகள் - மாணவர்கள் தரப்பிலிருந்து எழுந்துள்ளது. கண்டிப்பாக தேவைப்படும் வழித்தடங்களில் தேவையானளவு பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்படும்” என்றார்.
இவற்றைத்தொடர்ந்து செய்தியாளர்கள் மத்தியில் பேசுகையில், “அரசு உதவி பெறும் பள்ளிகளின் அங்கீகாரம் புதுப்பிக்கப்படாததால், அங்கு பணிபுரிந்து வந்த ஆசிரியர்களுக்கு ஊதியம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால், ஆசிரியர்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இவ்விஷயத்தில் அரசு என்ன செய்யவுள்ளது?” என்று அவரிடம் கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளிக்கும் வகையில் அவர், “தமிழ்நாட்டில் பள்ளிகள் தொடர்பாக 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது. அவற்றில் உள்ள பிரச்னைகள் படிப்படியாக சரி செய்யப்படும். புதிய கல்விக் கொள்கையையின் சிறப்பு அம்சங்களை ஆளுநர் தொடர்ச்சியாக எல்லா இடங்களிலும் பேசி வருகிறார். எனிலும் தமிழக முதல்வர் மாநில கல்விக் கொள்கையை உருவாக்குவதற்கான திட்டம் வைத்துள்ளார். அதற்காக முதன்மை செயலாளருடன் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. மாநில கல்விக் கொள்கையை வடிவமைப்பதற்கான குழுவில் யார் யார் இடம்பெற வேண்டும் என்பதற்கான பட்டியல் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இந்த குழுவை தமிழக முதல்வர் இறுதி செய்வார். ஒரு சில மாதங்களில் மாநில கல்விக் கொள்கை தயாரிக்கப்பட்ட பின்னர், அது கொள்கைரீதியான பிரச்னைகளுக்கு ஒரு தீர்வாக அமையும்.
கல்வித் துறையில் புதிய பணி நியமனம், பதவி உயர்வு போன்றவை படிப்படியாக நிறைவேற்றப்படும். தேசிய கல்விக் கொள்கையில் 3ம் வகுப்பிற்கு பொது தேர்வு எழுத வேண்டும் என்று சொல்கிறார்கள். இது சரியல்ல, ஏற்புடையதும் அல்ல. மழலையர் பள்ளி மாணவர்களுக்கு செயல்முறை கல்வி முறையில் மாற்ற வேண்டி உள்ளது. ஒவ்வொரு கட்டமாக அவை செய்யப்படும்” என்றார்.
- லெனின்