85% உள்ஒதுக்கீடு ரத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு
மருத்துவ படிப்பில் 85% உள்ஒதுக்கீடு ரத்தை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.
மருத்துவ படிப்பில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் படித்த மாணவர்களுக்கு 85 சதவீத இடங்களை ஒதுக்கியும், மீதமுள்ள 15 சதவீத இடங்களை சி.பி.எஸ்.இ. உள்ளிட்ட பிறவகை பாடத்திட்டத்தின் கீழ் படித்த மாணவர்களுக்கு ஒதுக்கியும் தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இதை எதிர்த்து சி.பி.எஸ்.இ. மாணவர்கள் சிலர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி கே.ரவிச்சந்திரபாபு, தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்து உத்தரவிட்டார்.
இதனை எதிர்த்து தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவில், தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய மறுப்பு தெரிவித்த உயர்நீதிமன்றம் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவையும் தள்ளுபடி செய்தது. இதனிடைய 85% உள்ஒதுக்கீடு ரத்தை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உறுதி அளித்திருந்தார்.
அதனடிப்படையில் தற்போது தமிழக அரசு உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. தமிழக அரசு தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனுவில் மாநில அரசின் கொள்கை முடிவில், நீதிமன்றம் தலையிட முடியாது என்று கூறியுள்ளது. உயர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து தமிழக அரசின் அரசாணையை உறுதி செய்யவும் அந்த மனு கோரியுள்ளது.