புது சீருடை... புது புத்தக வாசம்... விடுமுறைக்கு பின் பள்ளிகள் இன்று திறப்பு

புது சீருடை... புது புத்தக வாசம்... விடுமுறைக்கு பின் பள்ளிகள் இன்று திறப்பு
புது சீருடை... புது புத்தக வாசம்... விடுமுறைக்கு பின் பள்ளிகள் இன்று திறப்பு

தமிழகத்தில் இன்று பள்ளிகள் திறக்கப்படுகின்றன. அதன்படி 1-ஆம் வகுப்பில் இருந்து 9-ஆம் வகுப்பு வரை புதிய மாணவர் சேர்க்கையும் இன்று தொடங்கப்படுகிறது.

பள்ளிப்பருவம் தான் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் மறக்கமுடியாத காலமாகும். அதிலும் புதுவகுப்புக்கு செல்லும்போது கிடைக்கும் புதிய புத்தகத்தின் வாசனை, புதிய சீருடை, புதிய பேனா என அனைத்துமே மாணவர்களுக்கு உற்சாகத்தை கொடுக்கும். உலகம் முழுவதையும் புரட்டிப்போட்ட கொரோனா காரணமாக, இந்த அனுபவங்களை மாணவர்கள் கடந்த இரு ஆண்டுகளாக இழந்துவிட்டனர்.

இந்நிலையில், இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ்நாட்டில் ஜூன் மாதம் பள்ளிகள் திறக்கப்படுகின்றன. அதில் ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை இன்று பள்ளிகள் திறக்கப்படும் நிலையில் மாணவர்களை வரவேற்க பள்ளிகள் தயாராக உள்ளன. வகுப்பறைகள், இருக்கைகள் சீரமைக்கப்பட்டுள்ளன. அரசுப் பள்ளிகளில் முதல் நாளான இன்றே மாணவர்களுக்கான பாடப் புத்தகங்களை வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மேலும் முதல் வகுப்பு முதல் 9-ஆம் வகுப்பு வரை புதிய மாணவர் சேர்க்கையும் இன்று தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிகள் திறக்கப்பட்டாலும், கொரோனா கட்டுப்பாட்டு விதிகள் தொடர்ந்து அமலில் இருக்கும் என மருத்துவத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் பள்ளிகள் காலை 9.10 மணி முதல் மாலை 4.10 மணி வரை நடைபெறும் என்றும், அதற்கான மாதிரி பாடவேளையையும் பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதேநேரத்தில் பள்ளி அமைவிடம், போக்குவரத்து வசதி உள்ளிட்டவற்றை கவனத்தில் கொண்டு, பள்ளிகள் செயல்படும் நேரத்தை மாற்றிக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இவைதவிர பேரவையில் அறிவிக்கப்பட்ட மாணவர்களுக்கான வெளிநாடு சுற்றுலா உள்ளிட்டத் திட்டங்களையும் செயல்படுத்த பள்ளிக்கல்வித்துறை அறிவுரை வழங்கியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com