நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் 12.41% சரிவு!
தமிழகத்தில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை 16,724 குறைந்துள்ளது.
இந்திய அளவில் மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை மற்றும் தேர்வு மையங்களின் எண்ணிக்கை வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு கூடுதலாக 50 தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளபோதும், நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டைவிட 12.41% அல்லது 16,724 குறைந்துள்ளது.
தமிழகத்தில் கடந்த ஆண்டு நீட் தேர்வுக்கு 1,34,714 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில் நடப்பு ஆண்டில் 1,17,990 பேர் விண்ணப்பித்திருக்கின்றனர். அதேசமயம் ஆந்திராவில் கடந்த ஆண்டு 57,755 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில் நடப்பு ஆண்டில் 61,892 பேரும், பீகாரில் கடந்த ஆண்டு 56,907 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில் இந்த ஆண்டு 78,960 பேரும் விண்ணப்பித்துள்ளனர். மகாராஷ்டிராவில் கடந்த ஆண்டு 2,17,468 பேரும், இந்த ஆண்டில் 2,28,914 பேரும் விண்ணப்பம் செய்துள்ளனர். உத்தரப்பிரதேசத்தில் 2019ஆம் ஆண்டில் 1,39,497 பேரும், நடப்பு ஆண்டில் 1,66,582 பேரும் விண்ணப்பித்துள்ளனர்.
அதேசமயம் டெல்லியில் கடந்த ஆண்டு 59,137 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில் இந்த ஆண்டில் 53,993 பேரும், ராஜஸ்தானில் கடந்த ஆண்டு 1,20,730 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில் நடப்பு ஆண்டு 1,08,537 பேரும் விண்ணப்பித்துள்ளனர். கேரளாவில் கடந்த ஆண்டில் 1,17,714 பேர் விண்ணப்பம் செய்திருந்த நிலையில், நடப்பு ஆண்டில் 1,15,959 பேர் விண்ணப்பித்துள்ளனர்.