’வொர்க் ஃப்ரம் ஹோம்’ : தனிமையில் வாடும் ஊழியர்கள்.. கருத்துக்கணிப்புகள் சொல்வதென்ன?
தற்போது நடத்தப்பட்ட வொர்க் ஃப்ரம் ஹோம் பற்றிய சர்வேயில், 60 சதவீதம் பேர் தனிமையாக இருப்பதாக உணர்வதாகவும், 41 சதவீதம் பேர் பணி உயர்வில் சிக்கல் உள்ளது எனவும் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
லின்ங்டுஇன் வொர்க்போர்ஸ் கான்பிடன்ஸ் இன்டெக்ஸ், கோவிட்-19 நெருக்கடி காரணமாக வீட்டிலிருந்தே பணிபுரிவோரின் தாக்கம் பற்றி கருத்துகணிப்பினை நடத்தியுள்ளது. ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை 16ஆயிரம் இந்திய பணியாளர்கள் இந்த ஆன்லைன் கருத்துக் கணிப்பில் கலந்துகொண்டனர். இதன்படி தற்போதுவரை 51 சதவீதம் பேர் வீட்டிலிருந்தே பணியாற்றிவருகின்றனர். இதில் 41 சதவீதம் பணியாளர்கள் வீட்டிலிருந்தே பணியாற்றுவதால் தங்களின் பணித்திறன் குறைவதாகவும், பணி உயர்வில் சிக்கல் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். 46 சதவீதம் பேர் பணி மற்றும் வாழ்க்கை சமநிலையை சமாளிக்க சிரமப்படுவதாக தெரிவித்துள்ளனர்.
இந்த நெருக்கடி காலத்தில் நிறுவனங்களிடமிருந்து அதிக ஒத்துழைப்பை பணியாளர்கள் எதிர்பார்க்கிறார்கள். 23 சதவீத பணியாளர்கள் மட்டுமே சிறப்பான மனநிலையில் பணியாற்றுவதாக கூறியுள்ளனர். வொர்க் ஃப்ரம் ஹோமில் பணியாற்றும் 36 சதவீத தாய்மார்கள், தங்களின் குழந்தைகளை சமாளிப்பதால் பணியில் கவனம் செலுத்த முடியவில்லை என்றும் தெரிவித்துள்ளனர். ஒட்டுமொத்தமாக 60 சதவீத பணியாளர்கள் வீட்டிலேயெ இருப்பதால் தனிமையாக உணர்வதாக தெரிவித்துள்ளனர்.

