சலுகை மதிப்பெண் வழங்கும் அரசாணை செல்லும்: உச்சநீதிமன்றம்
கிராமப்புறங்களில் சேவையாற்றிய மருத்துவர்களுக்கு சலுகை மதிப்பெண் வழங்கும் தமிழக அரசின் அரசாணை செல்லும் என்றும், தமிழக அரசு முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கையை நடத்தலாம் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்திய மருத்துவ கவுன்சில் விதிகளின்படி, முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கையில் 50% இடங்கள் அகில இந்திய இட ஒதுக்கீட்டுக்கும், 50% இடங்கள் மாநில அரசு இட ஒதுக்கீட்டுக்கும் வழங்கப்பட்டுள்ளது. அதில் மாநில அரசுக்கான 50% இட ஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடாக 50% இடங்கள், கிராமப்புறங்கள், மலைப்பகுதியில் பணிபுரியும் மருத்துவர்களுக்கு மதிப்பெண் அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வந்தது. ஆனால் கிராம பகுதிகளில் பணியாற்றும் அரசு மருத்துவர்களுக்கு பட்டமேற்படிப்பு மாணவர் சேர்க்கையின்போது சலுகை மதிப்பெண் இல்லையென இந்திய மருத்துவ கவுன்சில் விதி தெரிவித்தது.
இந்நிலயில், முதுநிலை மருத்துவ மாணவ சேர்க்கை தொடர்பாக தமிழக அரசு கடந்த மே 6- ஆம் தேதி புதிய அரசாணை வெளியிட்டு, அதன் அடிப்படையில் மே 7- ஆம் தேதி மருத்துவ பட்டமேற்படிப்பு மாணவர் சேர்க்கைக்கான தகுதிப் பட்டியலையும் வெளியிட்டது. இதில் 1066 இடங்களில் 999 இடங்கள் அரசு மருத்துவர்களுக்கு ஒதுக்கப்பட்டது. கிராமப்புறங்களில் சேவையாற்றிய மாணவர்களுக்கு சலுகை மதிப்பெண் வழங்கப்படும் என்றும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டது. அதன்படி கலந்தாய்வும் நடத்தி முடிக்கப்பட்டது.
இந்த அரசாணை மற்றும் கலந்தாய்வை ரத்து செய்யக்கோரி விழுப்புரத்தைச் சேர்ந்த டாக்டர் பிரணிதா உள்ளிட்ட பலர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்களை விசாரித்த உயர்நீதிமன்றம், கடந்த மே மாதம் நடத்தப்பட்ட முதுநிலை மருத்துவ மேற்படிப்பிற்கான அரசாணை மற்றும் தகுதிப்பட்டியலை ரத்து செய்து உத்தரவிட்டது. அத்துடன், புதிய தகுதிப் பட்டியலை வெளியிடவும் உத்தரவிட்டது. இதனை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், கிராமப்புறங்களில் சேவையாற்றிய மருத்துவர்களுக்கு சலுகை மதிப்பெண் வழங்கும் தமிழக அரசின் அரசாணை செல்லும் என்று கூறினர். கிராம பகுதிகளில் பணியாற்றும் அரசு மருத்துவர்களுக்கு பட்டமேற்படிப்பு மாணவர் சேர்க்கையின்போது சலுகை மதிப்பெண் இல்லையெனக் கூறும் இந்திய மருத்துவ கவுன்சில் விதிக்கு மட்டும் விதிவிலக்கு அளித்த உச்சநீதிமன்றம் பிற விதிகளைப் பின்பற்றி முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கையை நடத்தி கொள்ளலாம் என்று உத்தரவிட்டுள்ளது. இவ்வழக்கின் அடுத்தகட்ட விசாரணை செப்டம்பர் முதல் வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.