நாளை மறுநாள் நீட் தேர்வு முடிவுகள் - சி.பி.எஸ்.இ தகவல்
நீட் நுழைவு தேர்வு முடிவுகளை வெளியிட இருந்த தடையை நீக்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து நாளை மறுநாள் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என சி.பி.எஸ்.இ. தகவல் தெரிவித்துள்ளது.
மருத்துவப் படிப்புகளுக்கான பொது நுழைவுத் தேர்வான நீட் தேர்வு கடந்த மே 7-ஆம் தேதி நடைபெற்றது. நாடு முழுவதும் நடத்தப்பட்ட இந்த தேர்வுக்கான வினாத்தாளானது ஆங்கிலம் உட்பட 10 மொழிகளில் நடத்தப்பட்டன. நீட் தேர்வு முடிவுகளை ஜுன் மாதம் 8-ம் தேதி வெளியிட சிபிஎஸ்இ முடிவு செய்திருந்தது. ஆனால், தேர்வு மிகவும் கடினமாக இருந்தது என்றும், அனைத்து மாநிலங்களிலும் ஒரே வினாத்தாளை கொண்டு தேர்வுமுறை நடத்தப்படவில்லை என மாணவர்கள் சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பல்வேறு வழக்குகளை தொடுத்தனர். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை வினாத்தாள்களில் குளறுபடி இருந்ததாக கூறி, நீட் தேர்வு முடிவுகளை வெளியிட தடை வித்தித்திருந்தது. இந்நிலையில், நீட் நுழைவு தேர்வு முடிவுகளை வெளியிட உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, இந்த தேர்வு முடிவுகள் நாளை மறுநாள் வெளியிடப்படும் என சி.பி.எஸ்.இ. தகவல் தெரிவித்துள்ளது.