`இனி PhD படிக்க முதுநிலை கல்வி கட்டாயமில்லை... இளநிலை கல்வியே போதும்!’- யுஜிசி அறிவிப்பு

`இனி PhD படிக்க முதுநிலை கல்வி கட்டாயமில்லை... இளநிலை கல்வியே போதும்!’- யுஜிசி அறிவிப்பு
`இனி PhD படிக்க முதுநிலை கல்வி கட்டாயமில்லை... இளநிலை கல்வியே போதும்!’- யுஜிசி அறிவிப்பு

நான்கு வருட இளநிலை கல்வி படித்து, 10-க்கு குறைந்தபட்சம் 7.5 சிஜிபிஏ வைத்திருக்கும் மாணவர்கள், இனி நேரடியாக பிஹெச்.டி எனும் முனைவர் படிப்பு படிக்கலாம் என்று அறிவிப்பு வெளியுள்ளது. முன்னதாக முனைவர் படிப்புக்கு முதுநிலை படிப்பு கட்டாயம் என்றிருந்த நிலையில், அது தற்போது கட்டாயமில்லை (நிபந்தனைகளுக்குட்பட்டு) என்று பல்கலைக்கழக மானியக் குழு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

பல்கலைக்கழக மானியக் குழு சார்பில் இவ்வருடத்துக்கான புதிய நெறிமுறைகளில் இந்த தளர்வுகள் கூறப்பட்டுள்ளன. இந்த தளர்வின்கீழ் முனைவர் பட்டத்துக்கு படிப்போர், தங்களின் ஆய்வுக்கட்டுரையை காப்புரிமையின் கீழ் வரும்படியோ சக மதிப்பாய்வு செய்யப்பட்ட அல்லது பரிந்துரைக்கப்பட்ட பத்திரிகைகளில் மட்டுமே வெளியிடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அப்படி செய்வதன்மூலம், பிற தளங்களில் அவை திருடப்படுவதை தடுக்கமுடியும் என்பதால் இது அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

யு.ஜி.சி.யின் 2022 ஒழுங்குமுறைகள் பற்றிய முழு அறிவிப்பு ஜூன் மாத இறுதியில் வருமென எதிர்ப்பார்க்கப்படுகிறது. அப்படி வரும்பட்சத்தில், அவை 2022-23 கல்வியாண்டில் அமலுக்கு வருமென தெரிகிறது. இத்திட்டமானது, தேசிய கல்வி கொள்கையின் கீழ் நான்கு ஆண்டு கால இளநிலை படிப்பை ஊக்குவிக்கும் வகையில் கொண்டு வரப்பட்டதாக பார்க்கப்படுகிறது. இத்திட்டத்தின் மிகமுக்கிய நிபந்தனையாக இருப்பது, ``8 செமஸ்டர் / 4 ஆண்டு கால இளநிலை கல்வியை கற்போர், குறைந்தபட்சமாக 10-க்கு 7.5 என்று சிஜிபிஏ வைத்திருக்க வேண்டும்” என்பது மட்டுமே உள்ளது. இதில் எஸ்.சி/எஸ்.டி/ஓ.பி.சி./மாற்றுத்திறனாளிகள்/பொருளாதார ரீதியாக பின்தங்கியோருக்கு சிஜிபிஏ அளவுக்கு கூடுதலாக 0.5 % தளர்வு அளிக்கப்படுகிறது.

இந்த அறிவிப்பு குறித்து யு.ஜி.சி. தலைவர் ஜெகதீஷ் குமார் அளித்துள்ள பேட்டியில், ``முனைவர் படிப்புக்கான ஆய்வுசெய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் 4 வருட இளநிலை படிப்பை கற்கும் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில், இத்திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இப்படி முனைவர் பட்ட (பி.ஹெச்.டி) கனவோடு படிக்கும் மாணவர்களுக்கு, நம் உயர்க்கல்வி நிறுவனங்களில் சில தளர்வுகள் தரப்படவேண்டியது அவசியமாகிறது. அதனால்தான் இந்த திட்டத்தை அறிவுறுத்தியுள்ளோம். சி.ஜி.பி.ஏ. 7.5 க்கு குறைவாக இருப்பவர்கள், ஒரு வருடமாவது முதுநிலை படிப்பு படித்திருக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

யு.ஜி.சி.யின் 2022-ன் ஒழுங்குமுறைகளில், இதேபோல இன்னும் சில தளர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி பல்கலைக்கழகங்களில் இனி 40% காலி மாணவ சேர்க்கையிடங்கள், பல்கலைக்கழக அளவிலான தேர்வுகளின்மூலம் நிரப்பிக்கொள்ளப்படலாம். மாணவர் சேர்க்கை, இருவிதங்களில் நடைபெறும். அவை

* 100% தேசியளவிலான நுழைவுத்தேர்வு வழியான சேர்க்கை

* 60-40 என்ற அளவில் தேசியளவிலான நுழைவுத்தேர்வு வழியான சேர்க்கையும் - மாநிலளவிலான நுழைவுத்தேர்வு / பல்கலைக்கழக அளவிலான நுழைவுத்தேர்வு வழியிலான சேர்க்கை

ஒருவேளை 100% மாணவ சேர்க்கையும் தேசிய நுழைவுத்தேர்வு (யு.ஜி.சி., சி.எஸ்,ஐ.ஆர்., ஐ.சி.எம்.ஆர், ஐ.சி.ஏ.ஆர் உள்ளிட்டவை நடத்தும்) வழியாகவே நடைபெறும் எனில், அதில் தேர்ச்சிபெறும் மாணவர்கள் உயர்க்கல்வி நிறுவனம் நடத்தும் நேர்காணல் / வைவா மூலம் வெயிட்டேஜ் முறையில் மெரிட் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com