9, 10, 11-ஆம் வகுப்பு மாணவர்கள் ஆல் பாஸ்: அக்கறையா, அரசியல் ஆதாயமா? - ஒரு பார்வை

9, 10, 11-ஆம் வகுப்பு மாணவர்கள் ஆல் பாஸ்: அக்கறையா, அரசியல் ஆதாயமா? - ஒரு பார்வை
9, 10, 11-ஆம் வகுப்பு மாணவர்கள் ஆல் பாஸ்: அக்கறையா, அரசியல் ஆதாயமா? - ஒரு பார்வை

தமிழகத்தில் 9, 10, 11-ஆம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வின்றி தேர்ச்சி பெறுவதாக சட்டப்பேரவையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. அதில், கேள்வி நேரம் முடிவடைந்த பிறகு 110 விதியின் கீழ் முதல்வர் பழனிசாமி அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், 9,10, 11-ஆம் வகுப்பு மாணவர் பொதுத்தேர்வின்றி தேர்ச்சி பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 12 ஆம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு தேதி ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுவிட்டது. மே 3 ஆம் தேதியிலிருந்து தேர்வு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு 10 வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என முதல்வர் அறிவித்திருந்தார். அதேபோல், இந்த ஆண்டும் 9, 10, 11-ஆம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வின்றி தேர்ச்சி பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தனியார் பள்ளிகள் கூட்டமைப்பின் நந்தக்குமார் பேசும்போது, “உண்மையாகவே வருத்தம் தரக்கூடிய விஷயமாக இருக்கிறது. கல்வியாளர்களுக்கு மன வருத்தத்தையும் அழுத்தத்தையும் தரக்கூடிய விஷயம். மாணவர்கள் படிப்பதையே மறந்துவிடுவார்கள். குறைந்த அளவு பள்ளியிலேயே தேர்வு நடத்தி பள்ளி அளவிலேயே தேர்ச்சியை கொடுத்திருக்கலாம்.

அவசரப்பட்டு தேர்தலை மனதில் வைத்து இவர்கள் அறிவிக்கும் அறிவிப்புகளால் கொஞ்சம் படிக்கும் மாணவர்கள் கூட படிக்க மாட்டார்கள். அதிலும் தனியார் பள்ளியின் நிலை மிகவும் கேள்விக்குறியாக இருக்கும். இதை எதற்காக சொன்னார்கள், யாரை திருப்திப்படுத்த சொன்னார்கள், யாரை கேட்டார்கள் என்பது கூட தெரியாது.

இவர் ஓட்டு வாங்கி வெற்றி பெற வேண்டுமானால் மாணவர்களா ஓட்டு போடப்போகிறார்கள்? அவசரப்பட்டு அறிவிப்புகளை வெளியிடும் முதல்வர், கல்வியிலும் அவசரப்பட்டுவிட்டார்” எனத் தெரிவித்தார்.

இதுகுறித்து கல்வியாளர் மாலதி பேசும்போது “நிஜமாகவே வருந்ததக்க அறிவிப்புதான். முதலில் இருந்தே இதற்கு ஒரு தெளிவு இல்லை. இது மிகவும் அவசரப்பட்டு எடுத்த முடிவு. ஆட்சி மாறினால் 10 ஆம் வகுப்பு சான்றிதழை வைத்துக்கொண்டு ஒரு மாணவர் எப்படி வேலை வாங்க முடியும். யார் யோசிக்கிறார்கள் இதைப்பற்றி? அரசியலையும் கல்வியையும் பிரித்து வைக்க வேண்டும். அது இல்லாமல் யாரை திருப்திப்படுத்த இந்த அறிவிப்பை வெளியிடுகிறார்கள். மாணவர்களுக்கு எதுவும் தெரியாது. ஆன்லைன் மூலம் கல்வி கற்றுக்கொடுத்தது எல்லாம் பொய்யா? உண்மையான மாணவர்கள் நலனில் அக்கறை கொள்ளவில்லை” என்றார்.

இதுகுறித்து அதிமுக செய்திதொடர்பாளர் வைகைச்செல்வன் கூறுகையில், “இதுவரை பள்ளிக்கூடத்திற்கே செல்ல முடியாத நிலை உள்ளது. இனிவரும் காலம் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்வு நடத்துவதில் சிரமம் ஏற்படும். இதுகுறித்து ஆலோசித்துதான் 9,10, 11-ஆம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வின்றி தேர்ச்சி என்ற அறிவிப்பை முதல்வர் அறிவித்துள்ளார்” எனத் தெரிவித்தார்.

கல்வியாளர் காய்த்ரி கூறுகையில், “இந்த அறிவிப்பு காலச் சூழலுக்கு ஏற்புடையதாக இருக்கலாம். தேர்வு வைப்பதற்கு அரசு ஒத்துவந்தபோதுகூட அரசியல் கட்சிகளும், நீதிமன்றமும் அதை ஏற்கவில்லை. அதனால் தான் தேர்வை ரத்து செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. ஆனால் இப்போது கொரோனா பரவல் குறைந்துள்ளது. இதுவரை நடத்திய பாடங்கள் வைத்து கூட எளிமையாக தேர்வை நடத்தியிருக்கலாம். வேலைக்கு போகும்போது கண்டிப்பாக இதில் சிக்கல் இருக்கும். அதிக மதிப்பெண்கள் வாங்க வேண்டும் என எண்ணிய மாணவர்களுக்கு இது மிகப்பெரிய வருத்தம்தான்” எனத் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com