தமிழகத்தில் 669 பள்ளிகளில் ஒற்றை இலக்கில் மாணவர்கள்... மாணவர் சேர்க்கை பேரணிக்கு ஏற்பாடு

தமிழகத்தில் 669 பள்ளிகளில் ஒற்றை இலக்கில் மாணவர்கள்... மாணவர் சேர்க்கை பேரணிக்கு ஏற்பாடு

தமிழகத்தில் 669 பள்ளிகளில் ஒற்றை இலக்கில் மாணவர்கள்... மாணவர் சேர்க்கை பேரணிக்கு ஏற்பாடு

தமிழ்நாட்டில் 22 பள்ளிகளில் ஒரு மாணவர் கூட இல்லை என்றும், 669 பள்ளிகளில் ஒற்றை இலக்கத்தில் மாணவர்கள் இருப்பதாகவும் தெரிவித்துள்ள பள்ளிக்கல்வித்துறை, வரும் 14-ம் தேதி மாணவர் சேர்க்கை பேரணியை நடத்த ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தி உள்ளது.

தமிழ்நாட்டில் வரும் ஜூன் 13-ம் தேதி 1 முதல் 10-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், அதற்கான முன்னேற்பாடுகள், மாணவர் சேர்க்கை குறித்து 20 ஆசிரியர் சங்கங்களின் பொறுப்பாளர்களுடன், பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் இன்று ஆலோசனை நடத்தினர்.

சென்னை நுங்கம்பாக்கம் பள்ளிக்கல்வித்துறை இயக்குநரகம் வளாகத்தில் நடைபெற்ற அந்த ஆசிரியர் சங்கங்களுடனான ஆலோசனைக்கூட்டத்தில் பேசிய பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள், “தொடக்கக் கல்வித்துறையின் கீழ் உள்ள 22 பள்ளிகளில் ஒரு மாணவர் கூட இல்லை. 669 பள்ளிகளில் ஒற்றை இலக்கத்தில் மாணவர்கள் படித்து வருகின்றனர். அதாவது 11 பள்ளிகளில் தலா ஒரே ஒரு மாணவரும், 24 பள்ளிகளில் தலா 2 மாணவர்களும், 41 பள்ளிகளில் தலா 3 மாணவர்களும், 50 பள்ளிகளில் தலா 4 மாணவர்களும், 77 பள்ளிகளில் தலா 5 மாணவர்களும், 114 பள்ளிகளில் தலா 6 மாணவர்களும், 95 பள்ளிகளில் தலா 7 மாணவர்களும், 104 பள்ளிகளில் தலா 8 மாணவர்களும், 153 பள்ளிகளில் தலா 9 மாணவர்களும், ஒரு மாணவர் கூட இல்லாமல் 22 பள்ளிகளும் இருக்கிறது.

இந்தப் பள்ளிகளிலெல்லாம் மாணவர் சேர்க்கையை உயர்த்த ஆசிரியர்கள் ஒத்துழைக்க வேண்டும். பள்ளி மேலாண்மைக் குழுக்களின் உதவியுடன் வரும் 14-ம் தேதி மாணவர் சேர்க்கை பேரணியை ஆசிரியர்கள் நடத்திட வேண்டும். 3,131 பள்ளிகளில் 10 முதல் 60 வரை மாணவர்கள் இருந்தும், தலைமை ஆசிரியரே 5 வகுப்புகளை நடத்தும் சூழல் இருக்கிறது. 3,800 பள்ளிகள் ஓராசிரியர் பள்ளிகளாக இருப்பதாகவும், அங்கெல்லாம் கூடுதலாக மாணவர்களை சேர்த்தால் அதற்கேற்ப ஆசிரியர் பணியிடங்கள் ஏற்படுத்தித் தரப்படும்” என்று வலியுறுத்தினர்.

இது தவிர ஆசிரியர்களுக்கான பயிற்சி வகுப்பில் அனைவரும் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என்றும், பயிற்சியில் பங்கேற்ற நாட்களுக்கு பின்னர் ஊதியத்துடன் கூடிய தற்செயல் விடுப்பு வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com