``பொதுத்தேர்தல் போல் பொதுத்தேர்வுக்கும் முக்கியத்துவம் தரப்படும்” - அமைச்சர் அன்பில் மகேஷ்
"தேர்தலுக்கு தரக்கூடிய முக்கியத்துவத்தை பொதுத் தேர்வுகள் நடத்துவதிலும் எங்கள் அரசு கொடுக்கும். அதே முக்கியத்துவத்துடன் பொதுத் தேர்வுகள் முடிக்கப்படும்" என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டியளித்துள்ளார்.
விரைவில் தமிழகத்தில் பள்ளிகளுக்கு பொதுத் தேர்வு நடத்தப்பட உள்ள நிலையில், அதற்கு தேவையான முன்னேற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைககள் தொடர்பான ஆலோசனைகள் கூட்டமானது சென்னை கோட்டூர்புரத்திலுள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் இன்று நடைபெற்றது. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தலைமையில் நடைபெற்ற அந்த ஆலோசனை கூட்டத்தில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அதிகாரிகள் மற்றும் தேர்வுத்துறை அலுவலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூட்டத்தின்போது திருப்புதல் தேர்வில் வினாத்தாள் வெளியான விவகாரத்தில் உரிய விசாரணை மேற்கொள்ள கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது. மேலும் பொதுத்தேர்வை எந்தவிதமான சச்சரவுக்கு இடம் தராமல் பாதுகாப்புடன், உரிய வழிமுறைகளை பின்பற்றி நடத்த அமைச்சர் அறிவுறுத்தினார்.
கூட்டத்தில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, “திருப்புதல் தேர்வு வினாத்தாள்கள் இரண்டாவது முறையாக வெளியாக இருக்கிறது. இந்த விஷயத்தில் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் சட்டப்படி அதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அதுமட்டுமன்றி பொதுத்தேர்வை பொறுத்தவரையில் எந்த வித சச்சரவுகளுக்கும் இடமின்றி பொதுத்தேர்தலுக்கு உரிய முக்கியத்துவத்துடன் தேர்வுகள் நடத்தி முடிக்கப்படும்.
நீட் தேர்வுக்கு தயாராக அரப்பள்ளி மாணவர்களுக்கு Hi Tech lab வாயிலாக பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றது. மாநில புதிய கல்விக் கொள்கையை உருவாக்குவதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் விரைவில் அதற்குரிய குழு அமைக்கப்படும்” என்றார்.
தொடர்ந்து அவரிடம் கடந்த சில மாதங்களில் தமிழ்நாட்டில் பள்ளிகளில் நடக்கும் விபத்துகள் குறித்து கேள்விகள் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “தமிழகத்தில் பாழடைந்த பள்ளிக்கட்டிடங்களில் ஏற்கனவே 10,000 கட்டடங்கள் இடிக்கப்பட்டுள்ளது. விரைவில் மீதம் இருக்கக்கூடிய கட்டிடங்களும் இடிக்கப்படும். அந்தப் பள்ளிகளில் பயின்று பிற மாணவர்கள் அருகாமையிலுள்ள வேறு வாடகை கட்டடங்களில் கல்வி பயில்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது” என்றார்.