சேலம்: 600ஐ தாண்டிய மாணவர்கள் சேர்க்கை- கேக் வெட்டி கொண்டாடிய ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி

சேலம்: 600ஐ தாண்டிய மாணவர்கள் சேர்க்கை- கேக் வெட்டி கொண்டாடிய ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி
சேலம்: 600ஐ தாண்டிய மாணவர்கள் சேர்க்கை- கேக் வெட்டி கொண்டாடிய ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி

சேலத்தில் 600 மாணவர்கள் என்ற எண்ணிக்கையை கடந்த ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு பெற்றோர் -ஆசிரியர் கழகத்தினர் பாராட்டு தெரிவித்துள்ளனர். பள்ளி அதிகாரிகள், 600-வதாக பள்ளியில் சேர்ந்த மாணவனை முன்னிலைப்படுத்தி, கேக் வெட்டி உற்சாக வரவேற்பளித்தனர்.

சேலம் கொண்டப்பநாயக்கன்பட்டி பகுதியில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய அரசு தொடக்கப்பள்ளியில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க பல்வேறு புதுமையை புகுத்தி வருகின்றனர். தங்கள் பள்ளியின் சிறப்பு அம்சங்கள் குறித்து நான்கு பக்க வண்ண மலரை வெளியிட்டு அதை சுற்றுவட்டார பகுதிகளில் வினியோகம் செய்து மாணவர் சேர்க்கையை அதிகரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பள்ளி வளாகத்தில் ஸ்மார்ட் டிவி பொருத்தப்பட்ட வகுப்பறைகள், வண்ணமயமான மாணவர் இருக்கைகள், தனியார் பங்களிப்போடு கணினி மையம், தொடக்கப் பள்ளியிலேயே பொது அறிவை மேம்படுத்தும் வகையில் நூலகம், ஒழுக்கநெறி மற்றும் ஆங்கில பேச்சு மொழி பயிற்றுவித்தல் என பல்வேறு சிறப்பு அம்சங்கள் உள்ளன.

பள்ளியின் சுற்றுச் சுவர் முழுவதும் பொது அறிவு சார்ந்த வண்ண ஓவியங்கள் வரையப்பட்டு மாணவ மாணவியர் காணும் இடமெல்லாம் அறிவு சார்ந்த விஷயங்களை கற்றுத் தேரும் அளவிற்கு காட்சியளிக்கிறது பள்ளி. மேலும் அறிவியல், விஞ்ஞானம், பாரம்பரிய கலைகள், கணிதம், இயற்கை சார்ந்த விஷயங்கள் என அனைத்தும் பள்ளியின் சுற்றுச் சுவரை அலங்கரிக்கின்றன.

கடந்த 2017- 2018ம் ஆண்டு சுகாதாரமான கழிப்பிட வசதி, மின்னணு கல்வி, படைப்பாற்றல் திறன் போன்றவற்றை கருத்தில் கொண்டு சேலம் மாவட்ட நிர்வாகம் சார்பாக வழங்கப்பட்ட சிறந்த பள்ளிக்கான விருதை, கொண்டப்பநாயக்கன்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதுபோன்ற நடவடிக்கைகள் காரணமாக பெற்றோர்கள் இப்பள்ளியில் தங்களது பிள்ளைகளை சேர்க்க மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். கொரோனா காலத்தில் அரசுப் பள்ளியில் மாணவர் சேர்க்கை விகிதம் அதிகரித்து வருகிறது. இருந்தபோதிலும் கொண்டப்பநாய்க்கன்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் உள்ள சிறப்பு அம்சங்கள் காரணமாக தங்கள் பிள்ளைகளை அங்கு சேர்ப்பதாக கூறுகின்றனர் பெற்றோர்.

இந்தப்பள்ளியில் கடந்த ஆண்டு மாணவர் எண்ணிக்கை 425 மட்டுமே இருந்த நிலையில், நடப்பு ஆண்டில் 230 மாணவர்கள் சேர்க்கப்பட்டு, மொத்தமாக 620 மாணவர்களாக எண்ணிக்கை உயர்ந்துள்ளது. இந்த சாதனையை கொண்டாடும் விதமாக 600 -வது மாணவனாக பள்ளியில் சேர்ந்த சிறுவனைக் கொண்டு கேக் வெட்டி பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் உற்சாகப்படுத்தினர். மேலும், சிறந்த நிர்வாகத்தை நடத்தி பள்ளிக்கு தொடர்ந்து பெருமை சேர்த்து வரும் ஆசிரியர்களுக்கு, பெற்றோர் - ஆசிரியர் கழகத்தினர் மலர் கொத்து கொடுத்து பாராட்டு தெரிவித்தனர்.

ஒழுக்கத்தை முதன்மைப் பாடமாகக் கொண்டு பயிற்றுவித்தது என்ற காரணத்தினாலும்; சுகாதாரத்தை பேணி காக்கும் நடவடிக்கைகளை செயல்முறையாக கற்றுக் கொடுப்பதாலும், கல்வியில் மட்டுமன்றி தங்கள் பள்ளி மாணவர்கள் அனைத்து விஷயங்களிலும் தனித்துவம் மிக்கவர்களாக திகழ்வார்கள் என நம்பிக்கை தெரிவிக்கின்றனர் பள்ளி ஆசிரியர்கள்.

மாணவர் சேர்க்கைக்கு ஏற்றார்போல பள்ளி கட்டுமானங்களை மேம்படுத்தி, கூடுதல் ஆசிரியர்களை நியமிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுகின்றனர் பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர்.

மோகன்ராஜ்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com