தமிழகமே அதிர்ந்து போன நீட் ஆள்மாறாட்ட வழக்கு கிடப்பில் போடப்பட்டுள்ளதா?

தமிழகமே அதிர்ந்து போன நீட் ஆள்மாறாட்ட வழக்கு கிடப்பில் போடப்பட்டுள்ளதா?
தமிழகமே அதிர்ந்து போன நீட் ஆள்மாறாட்ட வழக்கு கிடப்பில் போடப்பட்டுள்ளதா?

தமிழகமே அதிர்ந்துபோகும் அளவுக்கு கடந்த ஆண்டு நடைபெற்ற முறைகேடுகள் குறித்த வழக்குகள் கிடப்பில் போடப்பட்டுள்ளதாக கேள்விகள் எழுந்துள்ளன.

மருத்துவப் படிப்பில் சேர்ந்துவிட வேண்டும் என்கிற நோக்கில், ஆண்டுதோறும் முறைகேடுகள் நிகழ்வது வாடிக்கையாகிவிட்டது. உச்சக்கட்ட கெடுபிடிகள், கட்டுப்பாடுகள் என்று நீட் தேர்வை எழுதுவதற்கு முன் பல காட்சிகள் அரங்கேறும். ஆனால், அவை அனைத்தையும் மீறி கடந்த ஆண்டு நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து பலர் கல்லூரிகளில் சேர்ந்த சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தியது.

சென்னையைச் சேர்ந்த உதித் சூர்யா என்பவர் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதி, தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தார். இந்த முறைகேடு அம்பலமானதையடுத்து, உதித் சூர்யாவும், அவரது தந்தை மருத்துவர் வெங்கடேசனும் கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில், அந்தப் பட்டியல் நீண்டுகொண்டே சென்றது. நீட் தேர்வு ஆள் மாறாட்ட வழக்கில், இதுவரை 5 மாணவர்கள், அவர்களின் பெற்றோர், இடைத்தரகர் உள்பட 12 பேர் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து, ஆள்மாறாட்டம் செய்து தேர்வெழுதிய 10 பேரின் புகைப்படங்களை சிபிசிஐடி காவல்துறையினர் 7 மாதங்களுக்கு முன்பு வெளியிட்டனர். 10 பேர் மற்றும் இடைத்தரகராக செயல்பட்ட ரசீத் உள்ளிட்டோரை சிபிசிஐடி இதுவரை கைது செய்யவில்லை. இந்த வழக்கில் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்படவில்லை.

அந்த வரிசையில், ராமநாதபுரம் மாணவி தீக்‌ஷாவை மருத்துவப் படிப்பில் சேர்க்க அவரது தந்தையும் பல் மருத்துவருமான பாலசந்திரன் போலி நீட் சான்றிதழ்களை கொடுத்தது வெளிச்சத்திற்கு வந்தது.

இதுபோன்ற முறைகேடுகள் தொடர்ந்து நிகழாமல் இருக்க சில பரிந்துரைகளை மருத்துவர்கள் முன் வைக்கின்றனர். நீட் தேர்வில் பங்கேற்ற அனைத்து மாணவர்களின் மதிப்பெண்களுடன் தரவரிசைப் பட்டியலையும் வெளியிட வேண்டும். மாணவர்களின் இருப்பிட சான்றிதழ் குறித்து தெளிவான வரையறையை வெளியிட வேண்டும் என வலியுறுத்துகின்றனர். மேலும், முறைகேடுகள் தொடர்பாக பெற்றோர் மட்டுமின்றி, மாணவர்களையும் கடுமையாக தண்டிக்க வேண்டும் எனவும் மருத்துவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com