மருத்துவபடிப்பில் வன்னியர் இடஒதுக்கீடு: கலந்தாய்வை நிறுத்தக்கோரிய வழக்கை திரும்பபெற்ற பாமக

மருத்துவபடிப்பில் வன்னியர் இடஒதுக்கீடு: கலந்தாய்வை நிறுத்தக்கோரிய வழக்கை திரும்பபெற்ற பாமக
மருத்துவபடிப்பில் வன்னியர் இடஒதுக்கீடு: கலந்தாய்வை நிறுத்தக்கோரிய வழக்கை திரும்பபெற்ற பாமக
மருத்துவ கலந்தாய்வில் வன்னியர் இடஒதுக்கீடு தொடர்பான மேல்முறையீட்டு வழக்கில், “உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்புக்கும்வரை இந்த ஆண்டுக்கான மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையை நிறுத்தி வைக்க வேண்டும்” என பாமக முன்னாள் எம்.எல்.ஏ. சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை அவர் வாபஸ் பெற்றுள்ளார்.
முன்னதாக தமிழகத்தில் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் வன்னியருக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்திருந்தது. அதை எதிர்த்து தமிழக அரசு மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி உள்ளிட்டோர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், “இந்த வழக்கில் மறு உத்தரவு வரும் வரை 10.5 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் புதிதாக மாணவர் சேர்க்கையோ, பணி நியமனமோ நடைபெறக் கூடாது” எனக் கூறி, வழக்கை வரும் பிப்ரவரி 15 மற்றும் 16 ஆகிய தேதிகளுக்கு தள்ளிவைத்துள்ளது.
இந்நிலையில் “உச்ச நீதிமன்றத்தில் உத்தரவு வரும் வரை, தமிழகத்தில் எம்.பி.பி.எஸ். உள்ளிட்ட மருத்துவ படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடத்தக்கூடாது” என பாமக முன்னாள் எம்.எல்.ஏ.காவேரி வையாபுரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு, நீதிபதி தண்டபாணி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. வரும் 15ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வரவுள்ள நிலையில் அதுவரை மாணவ சேர்க்கையை ஒத்திவைக்குமாறு மனுதாரர் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
அப்போது நீதிபதி, “வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், உயர் நீதிமன்றத்தில் ஏன் மனுத்தாக்கல் செய்தீர்கள்?” என கேள்வி எழுப்பி, ஒரு லட்ச ரூபாய் அபராதத்துடன் வழக்கை தள்ளுபடி செய்யப்போவதாக எச்சரித்தார். இதனையடுத்து மனுவை திரும்ப பெற்றுக்கொள்வதாக மனுதாரர் தரப்பில் தெரிவித்தனர். அதனையடுத்து மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com