`அனுமதியோடுதான் தொலைநிலைக்கல்வி படிப்புகள் நடத்தப்படுகிறது’- பெரியார் பல்கலை. விளக்கம்

`அனுமதியோடுதான் தொலைநிலைக்கல்வி படிப்புகள் நடத்தப்படுகிறது’- பெரியார் பல்கலை. விளக்கம்
`அனுமதியோடுதான் தொலைநிலைக்கல்வி படிப்புகள் நடத்தப்படுகிறது’- பெரியார் பல்கலை. விளக்கம்

பெரியார் பல்கலைகழகத்தில் நடத்தப்படும் தொலைதூரக்கல்வி படிப்புகள் செல்லாது என UGC நேற்று மாலை அறிவிப்பு வெளியிட்டிருந்தது. இதைத்தொடர்ந்து சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் தொலைநிலைக்கல்வி படிப்புகள் யு.ஜி.சி. அனுமதியுடன் மட்டுமே நடத்தப்படுவதாக துணைவேந்தர் ஜெகநாதன் தெரிவித்துள்ளார்.

நேற்று மாலை யு.ஜி.சி சார்பில் வெளியிட்ட கடிதத்தில், முன் அனுமதி பெறாமல் பெரியார் பல்கலைக்கழகம் தொலைதூரக்கல்வி, ஆன்லைன் படிப்புகளை நடத்திவருகிறது எனக்கூறி இதுகுறித்து விசாரிக்குமாறு ஆளுநருக்கும், உயர்கல்வித்துறை செயலாளருக்கும் யு.ஜி.சி தரப்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது. மேலும், மாணவர்கள் யாரும் பெரியார் பல்கலைக்கழகம் நடத்தும் தொலைதூரக்கல்வி படிப்புகளிலோ, ஆன்லைன் படிப்புகளிலோ சேர வேண்டாம் என்றும் UGC எச்சரிக்கையும் விடுத்திருக்கிறது.

ஏற்கெனவே அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் தொலைதூரக்கல்வி படிப்புகள் செல்லாது என்று UGC அறிவித்துள்ள நிலையில், தற்போது பெரியார் பல்கலைகழகத்தில் நடத்தும் படிப்புகளும் செல்லாது என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் சேலம் பெரியார் பல்கலைக்கழக தொலைநிலைக்கல்வி படிப்புகள் யுஜிசி அனுமதியுடன் மட்டுமே நடத்தப்படுவதாக பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் தகவல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், `பெரியார் பல்கலைக்கழகத்தில் கடந்த டிசம்பர் மாதம் தேசிய தரமதிப்பீடு மற்றும் நிர்ணயக்குழு ஆய்வு மேற்கொண்டது. பெரியார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்று வரும் ஆய்வு திட்டங்கள், பாடத்திட்டம், மாணவர் நலன் சார்ந்த நடவடிக்கைகள், உள் கட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்களின் அடிப்படையில் ஏ++ அந்தஸ்தினை பெரியார் பல்கலைக்கழகத்திற்கு வழங்கி உள்ளது.

ஏ++ அஸ்தஸ்து பெற்றதில், அகில இந்திய அளவில் 2-ம் இடமும் தமிழகத்தில் முதலிடமும் பெற்ற அரசு பல்கலைக்கழகம் என்ற பெருமையை பெரியார் பல்கலைக்கழகம் பெற்றுள்ளது. தேசிய அளவில் சிறந்த 100 பல்கலைக்கழகங்களில் ஒன்றாகவும் பெரியார் பல்கலைக்கழகம் திகழ்கிறது. பெரியார் பல்கலைக்கழகத்தின் ஒரு அங்கமான பெரியார் தொலைநிலை கல்வி நிறுவனம் சார்பில், கடந்த 2020-ம் ஆண்டு ஜனவரி மாதம், 13 படிப்புகளை ஒரேயொரு பருவத்தில் மட்டும் நடத்திக்கொள்ள பல்கலைக்கழக மானியக்குழு யுஜிசி அனுமதி வழங்கியது.

இதன் அடிப்படையில் இதுவரை ஒருமுறை மட்டுமே மாணவர் சேர்க்கை செய்யப்பட்டது. மேலும், இணைய வழி கல்வியில் 7 படிப்புகளை நடத்திக்கொள்ள பல்கலைக்கழக மானியக்குழு கடந்த 2021-ம் ஆண்டு அனுமதி வழங்கியுள்ளது. பல்கலைக்கழக மானியக்குழு அனுமதி அளித்துள்ள படிப்புகள் மட்டுமே பெரியார் பல்கலைக்கழக தொலைநிலைக்கல்வி நிறுவனம் சார்பில் இதுவரை நடத்தப்பட்டு வருகின்றன’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com