இன்ஜினியரிங் படிப்புகளுக்கு இப்படி ஒரு நிலைமையா..?

இன்ஜினியரிங் படிப்புகளுக்கு இப்படி ஒரு நிலைமையா..?

இன்ஜினியரிங் படிப்புகளுக்கு இப்படி ஒரு நிலைமையா..?
Published on

168 பொறியியல் கல்லூரிகளில் மொத்தமாக 40 சதவீத இடங்களே நிரம்பியுள்ளதாக ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு பொறியியல் படிப்புக்கென்று தனி மதிப்பு இருந்தது. படித்து முடித்ததும் கை நிறைய சம்பளத்தில் வேலை இருக்கும் என்ற எண்ணமும் பெற்றோர்கள் மத்தியில் இருந்தது. இதனால் தங்களது குழந்தைகளை பொறியியல் படிப்பில் சேர்ப்பதற்கு ஆர்வம் காட்டினர். ஆனால் தற்போது ஏராளமான பொறியியல் பட்டதாரிகள் தாங்கள் படித்த படிப்பிற்கு சம்பந்தமே இல்லாத ஒரு வேலையைத்தான் செய்து வருகின்றனர். இதனால் பொறியியல் படிப்புகளில் மீதான மோகம் குறைந்து வருகிறது. இதனால் அதில் சேராமல் கலை அறிவியல் உள்பட பல படிப்புகளில் மாணவர்கள் கவனம் செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் 168 பொறியியல் கல்லூரிகளில் மொத்தமாகவே 40 சதவீத இடங்கள் தான் நிரம்பியுள்ளன என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.  தற்போது பொறியியல் படிப்புகளுக்கு ஆன்லைன் வழியாக கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. 4 கட்ட கலந்தாய்வு நடைபெற்று முடிந்துள்ள நிலையில் 168 கல்லூரிகளில் 40 சதவீத இடங்களே நிரம்பியுள்ளன. அதேசமயம் 291 பொறியியில் கல்லூரியில் வெறுமனே 20 சதவீத இடங்களே நிரம்பியுள்ளன. 35 கல்லூரிகளில் எந்தவொரு மாணவர்களும் சேரவில்லை.

இதுகுறித்து அனைத்திந்திய தனியார் கல்லூரி ஊழியர் சங்கத் தலைவர் கே.எம்.கார்த்திக் கூறும்போது, கல்வி அறக்கட்டளை என்ற பெயரில் வணிக ரீதியாக பொறியியல் கல்லூரிகளை பயன்படுத்த முடியாது என்பதை மாணவர்களின் சேர்க்கை குறைவு ஆதாரத்துடன் காட்டுவதாக தெரிவித்துள்ளார். ஐரோப்பிய நாடுகளில் செயல்படுவதை போல கல்லூரிகளிலும் பெற்றோருக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.

கடந்தாண்டு வரை  பொறியியல் கல்லூரிகளில் சேர வேண்டுமானால் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு வர வேண்டும். அப்போது கல்லூரி நிர்வாகங்கள் மாணவர்களை தங்கள் கல்லூரிகளில் சேர நிர்பந்திக்க வாய்ப்பு உண்டு என்றும் கூறப்படுகிறது. ஆனால் இந்தாண்டு முதல் ஆன்லைன் கலந்தாய்வு கொண்டுவரப்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள் தங்கள் விருப்பப்படும் கல்லூரிகளை தேர்வு செய்யலாம்.

இதனிடையே பல தனியார் கல்லூரிகளில் பேராசிரியர்களுக்கு உரிய நேரத்தில் சம்பளம் வழங்குவதில்லை என்ற குற்றச்சாட்டும் நிலவுகிறது. சொல்லாமல் கொள்ளாமல் பேராசிரியர்களை வேலையில் இருந்து தூக்குவதும் நடைபெறுவதாக கூறப்படுகிறது. இதுவும் கூட மாணவர்களுக்கு அந்தக் கல்லூரிகளில் நல்லெண்ணம் தோன்றாமல் இருக்க காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com