இந்தியாவில் 3% இன்ஜினியர்களுக்கு மட்டுமே பொருத்தமான வேலை - புள்ளிவிவரம் சொல்வதென்ன?
இந்தியாவில் வருடத்திற்கு 15 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் பொறியியல் பட்டம் பெறுகிறார்கள். ஆனால் இதில் சுமார் 2.5 லட்சம் மாணவர்கள் மட்டுமே தொழில்நுட்ப நிறுவனங்களில் பொருத்தமான வேலைகளில் அமர்கிறார்கள். சமீபத்தில் எடுக்கப்பட்ட புள்ளிவிவரத்தின்படி தி இந்தியன் எக்ஸ்பிரஸ் இது தொடர்பான செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதன்படி, இந்தியாவில் உள்ள பெரும்பாலான பொறியாளர்கள் வருடத்திற்கு ரூ.8 லட்சத்திற்கும் குறைவாக சம்பளம் பெறுகிறார்கள். அதிலும் 2.2 லட்சம் வேலைவாய்ப்புகள் சாஃப்ட்வேர் பக்கம் இருப்பதாகவும், அதிலும் 1.8 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் வருடத்திற்கு 3-5 லட்சத்திற்கும் குறைவாக சம்பளம் பெறுகிறார்கள் எனவும் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.
அதாவது வெறும் 3 சதவீத பொறியாளர்கள் மட்டுமே வருடத்திற்கு ரூ.8 லட்சத்திற்கும் மேல் சம்பளம் பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நல்ல சம்பளத்துடன் கூடிய நல்ல வேலையை பெறும் 3% பொறியாளர்களும் முதல் தர கல்லூரிகளில் இருந்து மட்டுமே வருவதாகவும், இரண்டாம் மற்றும் மூன்றாம் தர கல்லூரிகளில் படித்தவர்களுக்கு நல்ல வேலை என்பதே இல்லை எனவும் புள்ளிவிவரம் குறிப்பிட்டுள்ளது.
தொழில்துறைக்குத் தயாரான திறன்கள் இல்லாததே இது போன்ற பிரச்னைகளுக்கு காரணமாக இருப்பதாகவும், சரியான வேலை வாய்ப்பு இல்லாததால் 12.5 லட்சத்துக்கும் மேற்பட்ட பொறியாளர்கள் கிடைத்தவேலையை செய்வதாகவும் புள்ளிவிவரம் குறிப்பிட்டுள்ளது.