பொறியியல் படிப்புகளுக்கான ஆன்லைன் வகுப்புகள்: விவரம் வெளியிட்ட அண்ணா பல்கலைக்கழகம்!
தமிழகம் முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகளில் ஆன்லைன் வகுப்புகள் ஆகஸ்ட் 12 ஆம் தேதி தொடங்கப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. ஏற்கெனவே முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு கல்லூரி மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. இறுதி ஆண்டு மாணவர்களுக்கு தேர்வு நடத்தப்படும் எனவும் உயர்கல்வித்துறை அறிவித்திருந்தது.
ஆகஸ்ட் 12 ஆம் தேதி ஆன்லைன் வகுப்புகள் தொடங்குகின்றன. அக்டோபர் 26 ஆம் தேதி கடைசி வேலைநாள் எனவும், அக்டோபர் 28 ஆம் தேதி செய்முறைத் தேர்வுகள் எனவும் செமஸ்டர் தேர்வு நவம்பர் 9 ஆம் தேதி நடைபெறவும் என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
தற்போது அரசுக் கல்லூரிகளில் ஆன்லைன் மூலம் மாணவர் சேர்க்கை தொடங்கியுள்ளது. இந்த நிலையில், முதலாம் ஆண்டு மாணவர்களைத் தவிர, அனைத்து இளநிலை, முதுநிலை மாணவர்களுக்கும் ஆன்லைன் வகுப்புகள் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.