வேலை வாய்ப்பு மறுக்கப்படுவதாக புகார்... பள்ளிக்கு குழந்தைகளை அனுப்பாமல் பழங்குடியினர் போராட்டம்
நெல்லையில் காணி பழங்குடி மக்களுக்கு வேலைவாய்ப்பு மறுக்கப்படுவதாக குற்றம்சாட்டியுள்ளனர்.
நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் தாலுகா, பாபநாசம் மலைப்பகுதியில் செயல்படும் களக்காடு முண்டன்துறை புலிகள் காப்பக பகுதியில் காணி எனும் பழங்குடியினர் அதிக எண்ணிக்கையில் வாழ்கின்றனர். அகஸ்தியர் காணி குடியிருப்பு, மயிலாறு குடியிருப்பு, சேர்வலாறு குடியிருப்பு, மற்றும் இஞ்சிக்குழி குடியிருப்பு என மொத்தம் நான்கு பகுதிகளில் குழுக்களாக வசித்து வருகிறார்கள்.
இதில், மயிலாறு மற்றும், அகஸ்தியர் காணி குடியிருப்பு பகுதிகளில் அரசு உண்டுஉறைவிடப் பள்ளிகள் கடந்த 2010 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டன. இங்குள்ள அங்கன்வாடி மையங்களில் காணி பழங்குடி மக்களுக்கு பதிலாக எஸ்சி பிரிவினருக்கே வேலை வழங்கப்படுவதாக கூறி காணி மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்பட்டும் தங்களுக்கு பணிவாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளதாக இவர்கள் கூறுகிறார்கள்.
பழங்குடியினர் குடியிருப்பில் உள்ள அங்கன்வாடிக்கு பழங்குடியின பெண்களுக்கே முன்னுரிமை வழங்க வேண்டும் என கோரி மயிலாறு காணி குடியிருப்பில் உள்ள 49 குழந்தைகளையும் பள்ளிக்கு அனுப்பாமல் காலாண்டு தேர்வை புறக்கணித்து காணி மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
வேறு வேலைவாய்ப்புகள் இல்லாத சூழலில், இருக்கும் வேலைவாய்ப்பையும் பிறருக்கே வழங்குவது ஏன் என்று காணி பழங்குடியின மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.