“மாநில உரிமைகளுக்கு எதிரானது புதிய கல்விக்கொள்கை”- கல்வியாளர் கருத்து

“மாநில உரிமைகளுக்கு எதிரானது புதிய கல்விக்கொள்கை”- கல்வியாளர் கருத்து
“மாநில உரிமைகளுக்கு எதிரானது புதிய கல்விக்கொள்கை”-  கல்வியாளர் கருத்து

புதிய தேசிய கல்விக் கொள்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அதைத்தொடர்ந்து, அதன் முக்கிய அம்சங்களையும் உயர் கல்வித்துறை செயலர் அமித் கரே வெளியிட்டார். தற்போது நாடு முழுவதும்  கல்வியாளர்கள் மத்தியில் புதிய கல்விக்கொள்கை விவாதப்பொருளாக மாறியுள்ளது. 

பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் தொழிற்கல்வி பயிற்றுவிக்கப்படும் எனவும், குறைந்தபட்சம் ஐந்தாம் வகுப்பு வரை,  எட்டாம் வகுப்பு மற்றும் அதற்கு மேலும் முன்னுரிமை அடிப்படையில்  தாய்மொழி, உள்ளூர் மொழி, பிராந்திய மொழி  பயிற்று மொழியாக இருக்கவேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது.

பள்ளிக் கல்வியில் 3, 5 மற்றும் எட்டாம் வகுப்புகளில் அனைத்து மாணவர்களும் ஆணையம் நடத்தும் தேர்வுகளை எழுதுவார்கள். பள்ளிகள் வளாகங்களாக அல்லது தொகுப்புகளாக அமைக்கப்படும்.  அங்கு உள்கட்டமைப்பு, நூலகம்,  தொழில்முறை ஆசிரியர்கள் உள்பட அனைத்து வசதிகள் பெற்ற மாடலாக இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இளநிலை பட்டப்படிப்பு,  பன்னோக்கு வாய்ப்புகளுடன் 3 அல்லது 4 ஆண்டு கால படிப்பாக இருக்கலாம். உலகத் தரத்துக்கு இணையாக சிறந்த பன்னோக்கு கல்வி வழங்கும் ஐஐடிக்கள், ஐஐஎம்கள் ஆகியவற்றுக்கு இணையாக ஆராய்ச்சிப் பல்கலைக்கழகங்கள் அமைக்கப்படும் எனப் பல பரிந்துரைகளை புதிய கல்விக்கொள்கை வரையறுத்துள்ளது.

இதனிடையே புதிய கல்விக்கொள்கை, மாநில உரிமைகளைப் பறிப்பதாக உள்ளதாக குற்றம்சாட்டுகிறார் பொதுப்பள்ளிகளுக்கான மாநில மேடையின் பொதுச்செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு. 

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை இந்திய கூட்டாட்சி தத்துவத்தின் அடிப்படையில் உருவாக்கியபோது, விவாதத்தில் அவற்றைத் தொகுத்துப் பேசிய டாக்டர் அம்பேத்கர், மாநில அரசின் அதிகாரங்களை எந்தக் கட்டத்திலும் மத்திய அரசால் பறிக்க இயலாது என்று திட்டவட்டமாக அறிவித்தார். எது சாத்தியமில்லை என்று அம்பேத்கர் அறிவித்தாரோ, அதையே புதிய கல்விக்கொள்கை மூலம் சாத்தியப்படுத்த முயற்சி செய்திருக்கிறது தற்போதைய அரசு. பல்கலைக்கழகங்களை ஒருங்கிணைத்து மாநில அரசின் அதிகாரங்களைக் குறைக்க முயற்சிக்கிறது. உயர்கல்வியைப் பொறுத்தவரையில், அதை தீர்மானிக்கும் அதிகாரம் கொண்ட ஒற்றைமயப்படுத்தப்பட்ட அமைப்பை புதிய கல்விக்கொள்கை பரிந்துரை செய்கிறது.

இனிமேல் மாநிலத்தில் இருக்கும் பல்கலைக்கழகங்கள், அதன்கீழ் செயல்படும் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையைக்கூட மத்திய அரசே தீர்மானிக்கும். என்டிஏ எனப்படும் தேசிய தேர்வு முகமை ஆப்டியூட் தேர்வு மூலம் மாணவர்களைத் தேர்ந்தெடுக்கும். பிஏ தமிழ் படித்தால்கூட அவர்கள் அகில இந்திய தேர்வு வழியாகவே தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.  

இந்திய அளவில் பள்ளிக்கல்வியில் சமமான கற்றல் வாய்ப்புகள் அளிக்கப்பட வேண்டும் என 19 ஆம் நூற்றாண்டிலேயே சாவித்திரி பாய் பூலே போன்றவர்கள் வலியுறுத்தினார்கள். சுதந்திரப் போராட்ட தியாகிகளும் சுதந்திர இந்தியாவில் சமமான கல்வி கிடைக்கவேண்டும் என்று கனவு கண்டார்கள். எழுபது ஆண்டுகள் கடந்தும் நாம் அந்தக் கனவை அடையவில்லை என்பதுதான் கசக்கும் எதார்த்தம்.

இந்த புதிய கல்விக்கொள்கை தற்போதுள்ள கல்வி கட்டமைப்பை முற்றிலுமாக மாற்ற முயற்சி செய்கிறது. அரசுப் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை குறைவாக இருந்தால், அவற்றை அடுத்த பள்ளிகளோடு இணைத்துவிடுவது, சில பள்ளிகளை ஒருங்கிணைத்து பன்முக வசதிகள் கொண்ட சிறந்த பள்ளி வளாகங்களை உருவாக்குவது போன்ற கொள்கைகளை வைத்துள்ளது.

ஒருபக்கம் சமமான கற்றல் வாய்ப்புகளற்ற பள்ளிகளும் மறுபுறம் அனைத்து வசதிகளும் கொண்ட பள்ளிகளும் உருவாகும். இரு பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கும் ஒரே மாதிரியான தகுதித்தேர்வுகள் வைக்கப்படும். எந்த விதத்தில் நியாயமான முறையாக இருக்கமுடியும். இதுபோன்ற புதிய கல்வித் திட்டங்கள் சமூகத்தில் பெரும் ஏற்றத்தாழ்வுகளைத்தான் உருவாக்கும்.

வசதியான பள்ளிகளில் இருந்து வசதியற்ற பள்ளிகளுக்கு வளங்களை மாற்றலாம். அதிக ஆசிரியர் உள்ள பள்ளிகளில் இருந்து ஆசிரியர்களை இடமாற்றி  கூடுதல் வசதிகளை ஏற்படுத்தலாம். அப்படிச் செய்யாமல் புதிய பள்ளி வளாகங்களை உருவாக்குவோம் என்று சொல்கிறார்கள். கற்றல் வளங்களைக் கொண்ட பள்ளிக் குழந்தைகளின் கல்வித்தரமும், வாய்ப்பற்ற பள்ளி மாணவர்களின் கல்வித்தரமும் ஒன்றாகிவிடமுடியுமா?

எம்ஃபில் படிப்பை எடுத்துவிட்டார்கள். மூன்றாண்டு படிப்பை நான்கு ஆண்டுகளாக நீட்டிக்கிறார்கள். பன்னாட்டு மாணவர்களுக்கும் வாய்ப்பளிக்க ஒவ்வொரு பல்கலைக்கழகத்திலும் பிரத்யேக மையத்தை உருவாக்கவேண்டும் என்கிறார்கள். அவை தன்னாட்சி அதிகாரம் கொண்ட பல்நோக்குப் பல்கலைக்கழகங்களாக மாறும் என்கிறார்கள்.

தமிழகத்தில் உயர்கல்வி மிகச்சிறந்த வளர்ச்சியைப் பெற்றுள்ளது. மாணவர் சேர்க்கை, இடஒதுக்கீடு, பாடத்திட்டம் ஆகிய விஷயங்களில் முடிவெடுக்கும் அதிகாரங்கள் மாநில அரசிடம் இருந்துவருகின்றன. 2035 ஆம் ஆண்டில் மாணவர் சேர்க்கை விகிதம் 50 சதவீதமாக உயர்த்தப்படும் என அறிவித்துள்ளனர். அந்த விகிதத்தை கிட்டதட்ட நாம் அடைந்துவிட்டோம்.

எப்போதும் இறுக்கமான விதிமுறைகளை கல்வியில் நடைமுறைப்படுத்த முடியாது.  கட்டண விகிதம், மாணவர் சேர்க்கையில் உள்ள குறைபாடுகளைக் களைய மத்திய அரசு முயற்சி செய்யலாம். ஒரு மாணவன் எத்தனை மொழிகள் கற்றுக்கொள்ளவேண்டும் என்பதை அரசு எப்படி தீர்மானிக்க முடியும். மூன்று மொழிகளைப் படிக்கவேண்டும் என்று கூறியுள்ளனர்.    

ஆறாம் வகுப்பில் இருந்து எட்டாம் வகுப்பிற்குள் தொழிற்கல்வியில் தேர்ச்சி பெறவேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. நான் ஏன் எட்டாம் வகுப்பில் தொழில் கல்வியில் தேர்ச்சி பெறவேண்டும். அப்படி தேர்ச்சி பெறுகிற மானவன், உயர்கல்வி வரை செல்லமாட்டான். அவனது எதிர்கால வாய்ப்புகளுக்கு அது தடையாக மாறிவிடும்.

இன்றும்கூட நாட்டில் எத்தனையோ முதல் தலைமுறை பட்டதாரிகள் இருந்து வருகிறார்கள். பல்வேறு பாகுபாடுகள் கொண்ட இந்திய அமைப்பில், தொழில் கல்வி என்பதை பள்ளியில் கட்டாயப்படுத்துவது, சமூகத்தின் கல்வி நிலையை மேலும் பின்னுக்குத் தள்ளும் வழியாகவே இருக்கும்.  

1920 ஆம் ஆண்டு முதலே தமிழகத்தில் கல்வி தொடர்பாக மிகப்பெரிய கவனம் செலுத்தப்பட்டு வந்திருக்கிறது. பள்ளிக்கல்வியில் மதிய உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தி புரட்சியை உருவாக்கினார் காமராசர். அதைத்தொடர்ந்து ஆட்சிக்கு வந்த திராவிட கட்சிகளும் கல்வியில் நிறைய மாற்றங்களைச் செய்து பள்ளிக்கல்வியை வலுப்படுத்திவந்துள்ளன.

எனவே மாநில அரசின் உரிமைகளைப் பாதிக்கும் புதிய கல்விக்கொள்கையின் அம்சங்களை தமிழக அரசு நிராகரிக்கவேண்டும். நாட்டில் உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் சமமான கற்றல் வாய்ப்பை உருவாக்கவேண்டும் என்பதே நமது கோரிக்கையாக இருக்கிறது. அதுபோன்ற ஒரு கல்விக்கொள்கைதான் நமக்குத் தேவை” என்று விரிவாகப் பேசினார். 

சுந்தரபுத்தன் 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com