நீட் தொடர்பான அவசரச் சட்டம்: மீண்டும் கருத்து கேட்கிறது சுகாதாரத்துறை
நீட் தொடர்பான தமிழக அரசின் அவசரச் சட்டத்தால் ஒரு மாணவர் கூட பாதிக்கப்படக் கூடாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ள நிலையில், அவசரச் சட்டம் குறித்து அரசு தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபாலின் கருத்தை மத்திய சுகாதாரத்துறை மீண்டும் கோரியுள்ளது.
ஏற்கனவே சுகாதாரத்துறை, மனிதவளத்துறை, மற்றும் சட்டத்துறை அவசரச் சட்டத்திற்கு இசைவு தெரிவித்திருந்தன. இந்தப் பின்னணியில் இன்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்தை சந்தித்து ஆலோசனை நடத்தினார். தமிழக அரசின் சட்டத்திற்கு மருத்துவ கவுன்சில் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில் தமிழக சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், மருத்துவ கவுன்சில் அதிகாரிகளைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.
மருத்துவ மாணவர் சேர்க்கையை உடனடியாக நடத்த கோரி சிபிஎஸ்இ மாணவர்கள் சார்பாக உச்சநீதிமன்றத்தில் நளினி சிதம்பரம் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், பாதிக்கப்படும் மாணவர்கள் குறித்த விரிவான விவரங்களை தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டிருந்தது. இந்தப் பிரச்னையில் ஒரு மாணவர் கூட பாதிக்கப்படாத வகையில் தீர்வு காண வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது. இந்த நிலையில் தமிழக அரசின் அவசர சட்டம் குறித்து மத்திய சுகாதாரத்துறை, தலைமை வழக்கறிஞரின் கருத்தை கேட்டுள்ளது.