"நீட் விலக்கு மசோதா: புதிய ஆளுநர் ஒப்புதல் தருவாரென நம்புகிறோம்” - மா.சுப்பிரமணியன்
நீட் விலக்கு மசோதவிற்கு புதிய ஆளுநர் விரைவாக ஒப்புதல் வழங்குவார் என நம்புவதாக தமிழக மக்கள்நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை வானகரத்தில் இந்திய அளவில் முதல்முறையாக அப்போலோ மருத்துவமனையில் அதிநவீன சிமுலேஷன் (உருவக படுத்துதல்) மையம் தொடங்கப்பட்டுள்ளது. இதன் துவக்க நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பங்கேற்று, மையத்தை துவங்கி வைத்தார். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் “மெகா தடுப்பூசி முகாம் மூலமாக, தமிழ்நாட்டில் நிர்ணயிக்கப்பட்ட ஒருநாள் இலக்கை விட கூடுதலாக 1 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. பல்வேறு உலக நாடுகள் 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுத்து வருகிறது. அதுபோன்று ஒன்றிய அரசும் தடுப்பூசி செலுத்த முன்வர வேண்டும். 12 முதல் 18 வயதுள்ளவர்களுக்கும் தடுப்பூசி செலுத்த வேண்டும்.
கொரோனா தடுப்பூசியின் தேவை மிக அதிகமாக நமக்கிருக்கும் இந்த சூழலில், ஒன்றிய அரசு தடுப்பூசி ஏற்றுமதி செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது. இது மிகவும் பொருத்தமற்ற ஒன்றாக உள்ளது. முதலில் மாநிலங்கள் அனைவத்துக்கும் தடுப்பூசி இலக்கை அடைய தேவையானதை செய்யுங்கள். பின்னர் ஏற்றுமதியை வைத்துக்கொள்ளுங்கள்” என தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து ஏ.கே.ராஜன் குழுவின் நீட் தாக்கம் அறிக்கை குறித்த கேள்விக்கு, “அந்த ஆணையத்திற்கு 85,000 புகார் மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளன. அதனடிப்படையில் அவர்கள் சமர்ப்பித்திருக்கும் அறிக்கை, நீட் தேர்வு மூலமாக அரசு பள்ளி மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை சுட்டிக்காட்டுகிறது. தற்போது புதிதாக பொறுப்பேற்றுள்ள ஆளுநர் நீட் விலக்கு மசோதவிற்கு விரைவாக ஒப்புதல் வழங்குவார் என நம்புகிறோம். இதன் பின்னர் குடியரசு தலைவருக்கு அந்த அறிக்கை உடனடியாக அனுப்பப்படும்” எனவும் உறுதியளித்தார்.
மேலும் பேசுகையில், தமிழகத்தில் 1 முதல் 8 வரை பள்ளிகள் திறப்பது குறித்து அடுத்த ஊரடங்கு கட்டுப்பாடு தொடர்பான ஆலோசனைக்கு பின்னர் முதல்வர் அறிவிப்பார்” என்றார் அமைச்சர் மா.சுப்ரமணியன்.