நீட் தேர்வு - தேர்வுக்கு முன்னரும் பின்னரும் மாணவர்கள் செய்ய வேண்டியவை என்ன?

நீட் தேர்வு - தேர்வுக்கு முன்னரும் பின்னரும் மாணவர்கள் செய்ய வேண்டியவை என்ன?
நீட் தேர்வு - தேர்வுக்கு முன்னரும் பின்னரும் மாணவர்கள் செய்ய வேண்டியவை என்ன?

நீட் தேர்வுக்கு முன்னரும், தேர்வின்போதும், தேர்வு முடிந்த பிறகும் மாணவர்கள் என்ன செய்ய வேண்டும் என பயிற்சியாளர்கள் கூறும் பரிந்துரைகளை பார்க்கலாம்.

தேர்வு குறித்த அச்சத்தையும் பதற்றத்தையும் மாணவர்கள் முதலில் தவிர்க்க வேண்டும். குழப்பம், கவனச் சிதறல்கள் இன்றி இதுவரை படித்திருந்ததை மீள்பார்வை செய்துகொண்டு தெளிவான மனநிலையில் இருக்க வேண்டும். திருப்பிப் பார்க்கும் திட்டம் இல்லை எனினும் புதிதாக படித்து குழப்பம் அடைய வேண்டாம். குறிப்பிட்ட நேரத்தில் தேர்வு மையத்தை அடைவதற்கு ஏதுவாக வீட்டிலிருந்து புறப்படுதல், அவசியமற்ற கடைசி நேர பதட்டத்தை தவிர்க்கும். தேர்வுக்கு தயாரானது குறித்து யாரிடமும் பேசுவதை தவிர்க்கலாம். குறிப்பாக பதட்டத்தை ஏற்படுத்துவோர்களிடம் பேசுவதை தவிர்ப்பது மிக நல்லது.

விண்ணப்பத்தில் ஒட்டிய புகைப்படம் மற்றும் ஆதார் அட்டை அல்லது இதர அடையாள அட்டைகளில் ஒன்று வைத்துக் கொள்ளலாம். தேர்வுக்கான நுழைவு அட்டையின் 2 நகல்கள் வைத்துக் கொள்ளுதல் நல்லது. ஸ்டிக்கர்கள் ஒட்டப்படாத தண்ணீர் பாட்டில், முகக் கவசம், கையுறை, சானிடைசர் எடுத்து வர அனுமதியுண்டு. நீல வண்ண பால் பாயின்ட் பேனா தேர்வு மையத்தில் வழங்கப்படும்.

அரைக்கை சட்டை மட்டுமே அணிய வேண்டும், பெரிய பொத்தான் கொண்ட ஆடைகளை தவிர்க்க வேண்டும், ஷு அனுமதி இல்லை என்பதால் ஸ்லிப்பர் வகை காலணிகளை மட்டுமே அணிய வேண்டும். மாணவிகள் அதிக அலங்காரங்கள் அற்ற அரைக்கை ஆடைகளை அணியலாம். காதணிகள், வளையல் உள்ளிட்ட ஆபரணங்கள் எதையும் அணியக்கூடாது. தலையில் கிளிப் அணிவதையும் தவிர்த்துவிட்டு சாதாரண ஹேர் பேண்ட் அணிவதற்கு பரிந்துரைக்கப்படுகிறது.

நீட் தேர்வில் நேர மேலாண்மை அவசியம் என்பதை கருத்தில் கொண்டு திட்டமிடலோடு தன்னம்பிக்கையுடன் தேர்வை அணுக வேண்டும். முதலில் உறுதியாக விடை தெரிந்த வினாக்களைத் தேர்வு செய்து விடையளிக்க வேண்டும். தெரியாத, சந்தேகம் அளிக்கும் வினாக்களில் கவனம் செலுத்தி நேரத்தை வீணடிக்க வேண்டாம். அதனை இறுதியில் முயற்சி செய்து விடையளிக்கலாம்.

அறைக் கண்காணிப்பாளர் கேட்ட பின்னர் விடைத்தாளை வழங்க வேண்டும். தேர்வு நேரத்திற்கு பின்னர்தான் தேர்வு மையத்திலிருந்து வெளியில் செல்ல அனுமதிக்கப்படுவார்கள். வெளியில் வந்தவுடன் தேர்வு குறித்து யாரிடமும் ஆலோசிப்பதை தவிர்க்க வேண்டும். அதிகாரப்பூர்வமற்ற விடைக் குறிப்பைக் கொண்டு எழுதிய விடைகளை சரிபார்த்தலையும் தவிர்க்க வேண்டும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com