நீட் தேர்வு முடிவுகள் வெளியானது... தமிழகத்தில் 48.57% பேர் தேர்ச்சி
தமிழகத்தில் நீட் தேர்வு எழுதியவர்களில் 48.57% மாணவ, மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
நாடு முழுவதும் மருத்துவ படிப்பிற்கான நீட் எனப்படும் நுழைவுத்தேர்வு கடந்த மாதம் 5ஆம் தேதி கடும் சோதனை மற்றும் கட்டுப்பாடுகளுடன் நடைபெற்று முடிந்தது. ஒடிஷா மாநிலத்தில் மட்டும் ஃபானி புயல் பாதிப்பு காரணமாக நீட் தேர்வு தள்ளிவைக்கப்பட்டு பின்னர் கடந்த 20ஆம் தேதி நடத்தப்பட்டது.
இந்நிலையில் நீட் தேர்வு முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளன. இதில் தமிழகத்தில் 48.57 சதவீத மாணவ- மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அகில இந்திய அளவில் முதல் 50 இடத்தில் தமிழக மாணவர்கள் யாருமில்லை. அதேசமயம் தமிழக மாணவியான ஸ்ருதி அகில இந்திய அளவில் 57-வது இடம் பிடித்துள்ளார். இவர் 720 மதிப்பெண்களுக்கு 685 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். நீட் தேர்வில் தமிழகத்தில் கடந்தாண்டை விட இந்தாண்டு 9.01 சதவீதம் பேர் அதிகமாக தேர்ச்சி பெற்றுள்ளார். நீட் தேர்வு முடிவுகளை http://www.nta.ac.in , http://www.ntaneet.nic.in ஆகிய இணையதளங்களில் அறிந்து கொள்ளலாம்.

