கிராமப்புற மாணவர்களுக்காக பொறியியல் கலந்தாய்வில் பழைய முறையும் வேண்டும்: திமுக மனு
பொறியியல் படிப்புகளுக்கு ஆன்லைன் மூலம் மட்டுமே கலந்தாய்வு நடத்தப்படுவதை எதிர்த்து திமுக சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஆண்டுதோறும் பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெறும். கலந்தாய்வில் மாணவர்கள் பங்கேற்க வேண்டுமென்றால் மாநிலத்தின் பல பகுதிகளில் இருந்தும் மாணவர்கள் சென்னைக்கு வருவது கட்டாயம். அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நாளில் கலந்தாய்வில் பங்கேற்று தாங்கள் படிக்க விரும்பும் கல்லூரியை மாணவர்களால் தேர்வு செய்ய முடியும். இதனிடையே இந்த ஆண்டு முதல் பொறியியல் படிப்புகளுக்கு ஆன்லைன் மூலம் மட்டுமே கலந்தாய்வு நடத்தப்படும் என உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் அறிவித்தார். அதன்படி விண்ணப்தாரர்கள் இணையதளம் வழியாக தங்களது வீட்டில் இருந்தபடியே கலந்தாய்வில் பங்கு பெறலாம். மேலும் கிராமப் புறங்களில் உள்ள மாணவர்கள் பயன்பெறும் வகையில், 44 உதவி மையங்கள் மாவட்ட வாரியாக அமைக்கப்படும் எனவும் தெரிவித்தார். மேலும் மாவட்டத்தின் அளவைப் பொறுத்து மாவட்டந்தோறும் ஒன்று அல்லது இரண்டு மையங்கள் அமைக்கப்படும் என்றும் கூறினார்.
இந்நிலையில் பொறியியல் படிப்புகளுக்கு ஆன்லைன் மூலம் மட்டுமே கலந்தாய்வு நடத்தப்படுவதை எதிர்த்து திமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. திமுக எம்எல்ஏ எழிலரசன் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். அதில், ஆன்லைன் மூலம் மட்டுமே கலந்தாய்வு நடைபெற்றால் கிராமப்புற, தமிழ் வழிக்கல்வி பயின்றவர்கள் பாதிக்கப்படுவார்கள் என தெரிவித்துள்ளார். இதனால் கிராமப்புற மாணவர்கள் பொறியியல் படிப்பில் சேரமுடியாமல் கனவு வீணாகிவிடும் என்றும் கூறியுள்ளார். எனவே ஆன்லைன் கலந்தாய்வுடன் பழைய முறையை பின்பற்ற வேண்டும் எனவும் எழிலரசன் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த மனு வரும் மே மாதம் 4-ம் தேதி உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.