ஆண்-பெண் பாகுபாடுகள் நிறைந்த மத்திய அரசின் பாடப்புத்தகங்கள்: கல்வியாளர்கள் புகார்
நாடு முழுவதும் பல பள்ளிகளால் பின்பற்றப்படும் தேசியக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் (என்.சி.இ.ஆர்.டி) பாடப் புத்தகங்களில், 2 முதல் 5 ஆம் வகுப்பு வரையிலான பாடங்களில் பாலினப் பாகுபாடுகள் நிறைந்திருப்பதாக கல்வியாளர்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.
இரண்டாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான என்.சி.இ.ஆர்.டி புத்தகங்கள், ஆக்ஷன் எய்ட் எனப்படும் அரசு சாரா தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த ஃபிரெஞ்சு மாணவி அனைஸ் லெக்லேர் என்பவரால் ஆய்வு செய்யப்பட்டது. பாலின சமத்துவத்தை என்.சி.இ.ஆர்.டி புத்தகங்கள் மேம்படுத்துகிறதா என்பதை ஆராயும் நோக்கத்தோடு செய்யப்பட்ட இந்த ஆய்வின் முடிவில், ஆண்களும் பெண்களும் செய்யும் வேலைகள் பாகுபாட்டுடன் அணுகப்பட்டிருப்பதாகவும், ஆண் வேலைகள், பெண் வேலைகள் என்பது போன்ற பாகுபாடுகள் நிறைந்து காணப்படுவதாகவும் கண்டறிந்துள்ளார்.
உதாரணமாக நான்காம் வகுப்பு என்.சி.இ.ஆர்.டி ஆங்கிலப் பாடப் புத்தகத்தில், பால்காரர் (Milkman), போலீஸ்காரர் (Policeman), ஐஸ்க்ரீம்காரர் (Icecream man)என்று குறிப்பிடப்பட்டுள்ளதாகவும், விளையாட்டிலோ, வெளியுலக நடவடிக்கைகளை குறிப்பிடும் பெண்கள் ஈடுபடுவதாக குறிப்பிடும் பெயர்கள் மிகவும் குறைவாக உள்ளதாகவும் குறிப்பிடுகிறார் அனைஸ் லெக்லேர்.
பெண்கள் வீட்டு வேலை செய்வது, குழந்தைகளைப் பராமரிப்பது ஆகிய வேலைகளைச் செய்யும்விதமாக குறிப்பிடப்பட்டுள்ளதுடன், கட்டட வேலைகளை ஆண்கள் செய்வது போல படங்களையும், “தந்தையின் கடின உழைப்பில் வந்த ஊதியம்” போன்ற வரிகள் இடம்பெற்றிருப்பதாகவும், ஆண்கள் பொது வேலைகளைச் செய்வதாகவும், பெண்கள் குடும்பப் பராமரிப்பில் மட்டுமே ஈடுபடுவதுபோல் பாடங்கள் அமைக்கப்பட்டுள்ளது. பாடப்புத்தகங்களில் பாலின பாகுபாடு நிறைந்திருக்கிறது எனக் குற்றம்சாட்டியுள்ளார்.
ஆக்ஷன் எய்ட் தொண்டு நிறுவனத்தின் தலைவரான ஷிதிஜ் அர்ஸ் இதுகுறித்து தெரிவிக்கையில், “கல்வியாளர்கள் இத்தகைய பாகுபாடுகள் குறித்து புகார் தெரிவிக்கிறார்கள். டி.எஸ்.இ.ஆர்.டி பாடப்புத்தகங்களில் நாங்கள் பரிந்துரைத்த மாற்றங்கள் ஏற்கப்பட்டன. அதைப்போலவே, என்.சி.இ.ஆர்.டி புத்தகங்களும் தேவையான மாற்றங்களைக் கொண்டு வருமாறு மத்திய அரசிடம் பரிந்துரைக்க இருக்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.