தேசிய நல்லாசிரியர் விருது... தமிழக ஆசிரியர்கள் இருவர் தேர்வு

தேசிய நல்லாசிரியர் விருது... தமிழக ஆசிரியர்கள் இருவர் தேர்வு
தேசிய நல்லாசிரியர் விருது...  தமிழக ஆசிரியர்கள் இருவர் தேர்வு

தேசிய நல்லாசிரியர் விருதுக்குத் தேர்வான ஆசிரியர்கள் பட்டியலை மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதில் தமிழகத்தைச் சேர்ந்த திலிப், சரஸ்வதி ஆகிய இரண்டு ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இந்த ஆண்டு தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேசிய அளவில் 45 ஆசிரியர்களை மத்தியக் கல்வி அமைச்சகம் தேர்வு செய்துள்ளது. சிறப்புப் பிரிவில் மாற்றுத் திறனாளி ஆசிரியர்கள் இருவருக்கும் விருது வழங்கப்படுகிறது. தமிழகத்தில் இருந்து விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகிலுள்ள சத்தியமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் திலிப் மற்றும் சென்னை, அசோக் நகர் மகளிர் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் சரஸ்வதி ஆகிய இருவரும் விருதுக்காகத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஆசிரியர் திலிப், புதிய தலைமுறையின் ஆசிரியர் விருது பெற்றவர். 

ஆசிரியராக இருந்து குடியரசுத் தலைவராக உயர்ந்த சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பணிகளைப் போற்றும் வகையில் அவரது பிறந்த நாளான செப்டம்பர் 5-ம் தேதி ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. ஆசிரியர் பணியில் சிறந்து விளங்கும் ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தினத்தன்று தேசிய நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது.

தேசிய நல்லாசிரியர் விருதுபெறும் ஆசிரியர்களுக்கு டெல்லி விக்யான் பவனில் செப்டம்பர் 5 ஆம் தேதி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் விருதுகளை வழங்கிச் சிறப்பிப்பார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com