கல்விக்கடன் குறித்து விளம்பரப் பலகை: வங்கிகளுக்கு எம்.பி வெங்கடேசன் வலியுறுத்தல்

கல்விக்கடன் குறித்து விளம்பரப் பலகை: வங்கிகளுக்கு எம்.பி வெங்கடேசன் வலியுறுத்தல்
கல்விக்கடன் குறித்து விளம்பரப் பலகை: வங்கிகளுக்கு எம்.பி வெங்கடேசன் வலியுறுத்தல்
இன்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் எம்.பி, “கல்விக் கடனில் ஏற்படும் வாராக்கடனுக்கு மாணவர்கள் காரணமல்ல; சமூகமும், அரசும் தான் காரணம். அனைத்து கல்லூரிகளிலும் கல்விக் கடன் தொடர்பாக விளம்பரப் பலகை வைக்க வங்கிகளை அறிவுறுத்தியுள்ளோம்” எனக்கூறியுள்ளார்.
மதுரை மாவட்டத்தில் உயர் கல்வி மாணவர்களுக்கு கல்விக் கடன் வழங்குவது தொடர்பாக கல்வித்துறை மற்றும் வங்கி அதிகாரிகளுடனான ஆலோசனைக்கூட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் மற்றும் மாவட்ட ஆட்சியர் அனிஷ்சேகர் தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் மாணவர்களுக்கு கல்விக் கடன் எளிதாக கிடைப்பதற்கான நடைமுறைகள் குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது.
இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் பேசியபோது,
“ஹவுசிங் லோன்க்கு செய்யும் விளம்பரங்கள்போல கல்விக் கடன் வழங்குவது தொடர்பாகவும் வங்கிகள் விளம்பரம் செய்ய வேண்டும். மேலும் கல்விக் கடனில் ஏற்படும் வாராக்கடனுக்கு மாணவர்கள் காரணமல்ல; சமூகமும், அரசும் தான் காரணம். அனைத்து கல்லூரிகளிலும் கல்விக் கடன் தொடர்பாக விளம்பரப் பலகை வைக்க கல்வித்துறை மற்றும் வங்கிகளுக்கு வலியுறுத்தியுள்ளோம். இதேபோன்று கல்விக் கடன் விண்ணப்பங்கள் மீதான நிராகரிப்பு மற்றும் ஏற்பு குறித்து ஒவ்வொரு 10 நாட்களுக்கும் ஒரு முறை மாவட்ட அளவில் ஆலோசிக்க உள்ளோம். நியாயமான காரணம் இல்லாமல் மாணவர்களின் கல்விக்கடன் விண்ணப்பங்களை வங்கிகள் நிராகரிக்ககூடாது என வங்கிகளுக்கு ஆலோசனை அளித்துள்ளோம்.
இந்த ஆண்டு மதுரை மாவட்டத்தில் 500 கோடி ரூபாய் கல்விக் கடன் வழங்குவதை பெரும் இயக்கமாக நடத்திவருகிறோம். கல்விக் கடன் வழங்குவது தற்போதுவரை தொடர்பாக இரு ஆலோசனை கூட்டங்கள் நடத்தியுள்ளோம். மதுரை மாவட்டத்தில் கடந்த 31ஆம் தேதி கல்விக் கடன் வழங்குவது தொடர்பாக 357 பள்ளிகளுக்கான இணையதள கூட்டம் நடைபெற்றது. இதில் 10ஆயிரம் மாணவர்கள் பங்கேற்றுள்ளனர். கல்விக் கடன் பெறுவது தொடர்பாக மாணவர்கள் ஆர்வமுடன் உள்ளனர். இந்த கல்வியாண்டில் 657 மாணவர்கள் கல்விக் கடன் பெற கோரி வித்யாலட்சுமி போர்டலில் விண்ணப்பித்துள்ளனர்” என்றார்.
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் அனிஷ்சேகர், “கல்லூரிகளில் அரசு நிர்ணயத்ததை விட மாணவர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலித்தால், நிர்வாகம் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கல்விக்கடன் தொடர்பாக வங்கி அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை நடத்தினோம். கல்விக்கடன் பெறுவது தொடர்பான ஆலோசனைகளை வழங்குவதற்காக மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் ஒரு வாரத்திற்குள் கட்டுப்பாட்டு அறை தொடங்க உள்ளோம்” என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com