"வணக்கம் கோயம்புத்தூர், எப்படி இருக்கீங்க" - தமிழ் மொழியை புகழ்ந்த மத்திய அமைச்சர்!

"வணக்கம் கோயம்புத்தூர், எப்படி இருக்கீங்க" - தமிழ் மொழியை புகழ்ந்த மத்திய அமைச்சர்!
"வணக்கம் கோயம்புத்தூர், எப்படி இருக்கீங்க" - தமிழ் மொழியை புகழ்ந்த மத்திய அமைச்சர்!

தேசிய கல்விக் கொள்கையை பொறுத்தவரை அனைத்து மாநில அரசுகளுடன் ஒன்றிணைந்து விரைவாக அதனை செயல்படுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அதற்கான நிதி வரும் பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்படும் எனவும் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார். கோயம்புத்தூரில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டவர் இவ்வாறு கூறினார்.

கோவை அவிநாசிலிங்கம் மனையியல் மற்றும் மகளிர் உயர் கல்வி நிறுவனத்தின் 34 ஆவது பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக மத்திய கல்வி, திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சர் தர்மேந்திர பிரதான் கலந்துகொண்டு 2073 மாணவருக்கு பட்டம் வழங்கினார். இந்த விழாவில் 52 மாணவியர் முனைவர் பட்டம் பிஎச்டி பெற்றனர். இரண்டு மாணவியர் ஆய்வியல் நிறைஞர் எம்பில் பட்டம் பெற்றனர். 29 மாணவிகள் முதுகலை பட்டம் மேம்பட்ட பட்டய பட்டமும், அட்வான்ஸ் டிப்ளமோ பெற்றனர். 554 மாணவியர் முதுநிலை பட்டம் பெற்றனர். 2066 மாணவியர் இளநிலை பட்டம் பெறுகிறார்கள்.

நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்:

"வணக்கம் கோயம்புத்தூர், நீங்க எப்படி இருக்கீங்க" என தமிழில் உரையை தொடங்கினார் மத்திய அமைச்சர்.

”கோவை வர்த்தகத்திற்கு சிறந்த நகரம். தமிழ் மிகச் சிறந்த பழமையான மொழி..ஒழுக்கமான வாழக்கை முறையை திருக்குறள் கற்பித்துள்ளது. இந்தியா ஜனநாயக நாடுகளின் தாயகம். தமிழகத்திற்கு அதில் மிக முக்கிய பங்கு உள்ளது. தமிழ் நாடு மற்ற மாநிலங்களை விட அதிக பணி புரியும் பெண்கள் உள்ள மாநிலமாக உள்ளது. தேசிய கல்விக் கொள்கையில் பல நல்ல விஷயங்கள் உள்ளன. நாட்டின் அனைத்து மொழிகளும் முக்கியம். ஒரு மொழியை விட இன்னொரு மொழி சிறந்தது என்று இல்லை. எல்லா மொழியும் தேசிய மொழி தான்.

தேசிய கல்விக்கொள்கை முன்னேற்றத்திற்கானது. நாம் புதிய முயற்சிகள், வாய்ப்புகளுக்காக தயாராக உள்ளோம். ந்தியா தான் டிஜிட்டல் பரிவர்த்தனையில் முன்னிலையில் உள்ளது. இந்தியாவில் மட்டும் தான் தடுப்பூசி போட்ட சில நொடிகளில் அதற்கான சான்றிதழ் கூட கிடைக்கிறது. காலனித்துவத்திற்கு எதிராக போராடுபவர் பிரதமர் மோடி. ஒவ்வொரு சிறிய விஷயங்களிலும் காலனித்துவத்திற்கு எதிராக முனைப்பு இருக்க வேண்டும். உலக வெப்பமயமாதால் உலகத்திற்கே பெரும் பிரச்னையாக உள்ளது. இந்த நாடு பல தரப்பட்ட கலாசாரம், மொழி, பாராம்பரியத்தை உள் கொண்டது. கலாசாரங்களை கடைசி வரை எடுத்து செல்ல வேண்டும். தேசிய கல்விக் கொள்கையில் மாணவர்கள், ஆசிரியர்கள் என அனைவருக்கும் முக்கிய பங்கு உள்ளது” என்றார்.

நிகழ்ச்சிக்குப் பின்னர்செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய தர்மேந்திர பிரதான், “தேசிய கல்விக் கொள்கையை பொறுத்தவரை அனைத்து மாநில அரசுகளுடன் ஒன்றிணைந்து விரைவாக அதனை செயல்படுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதற்கான நிதி வரும் பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்படும்” என்றார்.

மேலும், தமிழக அரசின் புதிய கல்விக் கொள்கை தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அவர், ”தேசிய கல்விக் கொள்கையை அனைத்து மாநிலங்களும் பின்பற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நிலையில், தேசிய அளவில் மத்திய அரசு கல்வித்துறையில் அமல்படுத்தியுள்ள பல்வேறு திட்டங்களை தமிழகம் உட்பட பல்வேறு மாநில அரசுகள் பின்பற்றி வருகிறது. புதிய கல்விக் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்ட சில ஆண்டுகளுக்கு பாடப்பிரிவுகளை தேர்ந்தெடுப்பதில் மாணவ மாணவியருக்கு முழு சுதந்திரம் அளிக்கப்படும். தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி குழு இதுவரை இந்தி, ஆங்கிலம், உருது உள்ளிட்ட மொழிகளில் மட்டும் புத்தகங்கள் அச்சிட்டு வெளியீடு செய்து வந்த சூழலில், இந்த ஆண்டு முதல் தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகளிலும் புத்தகங்கள் அச்சிட்டு வெளியிட இருக்கிறது” என்றார்.

மேலும், “பல்கலைக்கழக மானிய குழுவில் பல்வேறு குளறுபடிகள் இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வரும் நிலையில், விரைவில் பல்கலைக்கழக மாநியக்குழு மறுசீரமைப்பு செய்யப்படும்” என்று உறுதி அளித்தார்.

கல்வி நிறுவனங்களின் தரம் குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் தர்மேந்திர பிரதான், “தரத்திற்கும் கல்வி நிறுவனங்கள் அதிகரிப்பிற்கும் சம்பந்தம் இல்லை. செல்போன்கள் உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்பங்களை கையாள வெளிநாடுகளை மட்டுமே நம்பி இருந்த நிலை மாறி தற்பொழுது நம் நாட்டிலேயே ஆப்பரேட்டிங் சிஸ்டம் அப்ளிகேசன்கள் தயாரிக்கும் அளவுக்கு முன்னேறியுள்ளதற்கு கல்வி நிறுவங்களின் அதிகரிப்பும் ஒரு காரணம்” என்றும் சுட்டிக்காட்டினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com