பொறியியல் படிப்பில் மொத்தமே 6.14% அரசுப்பள்ளி மாணவர்கள்தான் - அமைச்சர் பொன்முடி
அரசு பள்ளியில் பயின்ற மாணவர்கள் 0.83 சதவீதம் பேர்தான் அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் படிப்பில் சேர்ந்துள்ளதாக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
உயர் கல்வித்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதில் அளித்து பேசிய அமைச்சர் பொன்முடி, மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி கொண்டு வந்த மாற்றங்களால்தான் உயர்கல்வித்துறை வளர்ச்சி அடைந்ததாகவும், கிராமப்புற மாணவர்களும் உயர் கல்வியில் அதிகளவில் சேரும்நிலை ஏற்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
அரசு பள்ளி மாணவர்கள் அண்ணா பல்கலைக்கழகத்தில் 0.83 சதவீதம் 2020-21 ஆம் கல்வியாண்டில் சேர்ந்துள்ளனர். இதேபோன்று அனைத்து பொறியியல் கல்லூரிகளை சேர்த்தாலும் மொத்தமாக 6.14 சதவீதம் மாணவர்களும், கால்நடைப்படிப்பில் 3 சதவீதமும், மீன்வளக் கல்லூரிகளில் 3.7 சதவீதமும், சட்டப்படிப்புகளில் 3.3 சதவீதமும், 6.79 சதவீதம் மாணவர்கள் வேளாண் படிப்புகளிலும் சேர்ந்துள்ளனர். இந்த நிலையில்தான் அரசு பள்ளி மாணவர்கள் உயர்கல்வி பெறுவதற்கு 7.5 சதவீத இடஒதுக்கீட்டை முதலமைச்சர் கொண்டு வந்துள்ளதாக தெரிவித்தார்.