+2 மதிப்பெண் அடிப்படையில் பொறியியல் கலந்தாய்வு..... உத்தரவாதம் தரமுடியாது என்கிறார் அமைச்சர்
அடுத்த ஆண்டில் பிளஸ் டூ மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே பொறியியல் கலந்தாய்வு இருக்கும் என்று தன்னால் உத்தரவாதம் தர இயலாது என உயர் கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், அடுத்த ஆண்டு பிளஸ்-2 மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே பொறியியல் கலந்தாய்வு இருக்கும் என்று என்னால் உறுதியாக கூறமுடியாது. பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் பொறியியல் கலந்தாய்வு நடத்த வேண்டும் என்பதே தமிழக அரசின் எண்ணம். மற்ற மாநிலங்கள் நுழைத்தேர்வை பின்பற்றினால் நாமும் அதைப் பின்பற்றித்தான் ஆக வேண்டும்.
நீட் தேர்வைப் பொறுத்த வரையில் தமிழக அரசு அதனை கடுமையாக எதிர்த்து வருகிறது. இது தொடர்பாக பிரதமரை தொடர்ந்து சந்தித்து வருகின்றோம். அதேபோல் பட்ட மேற்படிப்புகளுக்கும் நாம் ‘டான்செட்’ முறையினை பின்பற்றி வருகிறோம். அதனையும் மாற்ற வேண்டும் என மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது எனத் தெரிவித்தார்.