உபரி ஆசிரியர்களை இடமாற்றம் செய்து தமிழக அரசு பிறப்பித்த அரசாணை - உயர்நீதிமன்றம் தடை

உபரி ஆசிரியர்களை இடமாற்றம் செய்து தமிழக அரசு பிறப்பித்த அரசாணை - உயர்நீதிமன்றம் தடை
உபரி ஆசிரியர்களை இடமாற்றம் செய்து தமிழக அரசு பிறப்பித்த அரசாணை - உயர்நீதிமன்றம் தடை

அரசு உதவிப் பெறும் தனியார் பள்ளிகளில் உபரி ஆசிரியர்களை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு பிறப்பித்த அரசாணைக்குத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் அரசு உதவிப்பெறும் தனியார் பள்ளிகளில் பணியாற்றும் உபரி ஆசிரியர்களை வேறு பள்ளிகளுக்கு இடமாற்றம் செய்ய வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அந்த உத்தரவில், ஆண்டுதோறும் மாணவர்களின் எண்ணிக்கை அடிப்படையில் ஆசிரியர்களின் எண்ணிக்கையை ஜூலை இறுதிக்குள் முடிவு செய்ய வேண்டுமெனவும், சம்பந்தப்பட்ட பள்ளிகளிடம் ஆட்சேபங்களைப் பெற்று, ஆசிரியர்களின் எண்ணிக்கையை இறுதி செய்து, உபரி ஆசிரியர்களை, இடமாற்றம் செய்யும் நடவடிக்கையை அக்டோபர் 15ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டுமென கால நிர்ணயம் செய்தும் அரசுக்கு உத்தரவிட்டிருந்தது.

இந்த நடைமுறையின் அடிப்படையில் இந்த ஆண்டிற்கான உபரி ஆசிரியர்களை இடமாற்றம் செய்வது தொடர்பான உத்தரவை கடந்த ஜனவரி 23ஆம் தேதி தமிழ்நாடு அரசு பிறப்பித்தது. இதில் காஞ்சிபுரத்தை சேர்ந்த மரிய அக்சீலியம் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியைகள் அம்பிகாவேணி, சகாயராணி, மரியம்மா டெய்சி, எஸ்.எஸ்.கே.வி. அரசு உதவி பெறும் மகளிர் மேல்நிலைப் நிலை பள்ளிக்கு இடமாற்றம் செய்து உத்தரவிடப்பட்டு இருந்தது.

இந்த உத்தரவை எதிர்த்து மரிய அக்சீலியம் பள்ளி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதேபோல தங்கள் பள்ளி ஆசிரியைகள் ஜெசிந்தா, அஸ்வினி, பாத்திமா ஜெயமேரி, ஏஞ்சல் சகாய ரீகா ஆகியோர் இடமாற்றம் செய்யப்பட்டதை எதிர்த்து டாக்டர் கே.கே.நிர்மலா மகளிர் மேல்நிலைப்பள்ளி தரப்பிலும் வழக்கு தொடரப்பட்டது. அந்த மனுக்களில், 'ஒரு குழுமம் நடத்தும் பள்ளியில் உள்ள உபரி ஆசிரியர்களை அதே குழுமத்தில் உள்ள மற்றொரு பள்ளிக்கு தான் அனுப்ப வேண்டும். வேறு இடமாற்றம் செய்ய முடியாது' எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயர்நீதிமன்றம் தெரிவித்த கால அவகாசத்தை பின்பற்றாமலும், மனுதாரர் பள்ளி ஆட்சேபம் தெரிவிக்க அவகாசம் வழங்காமலும், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதாகவும் குற்றம்சாட்டியுள்ளனர். கல்வியாண்டு முடியும் நிலையில், ஆசிரியர்களை இடமாற்றம் செய்தால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும் என்பதால், தமிழ்நாடு அரசு பிறப்பித்த உத்தரவிற்கு தடை விதிக்கவும், அதை ரத்து செய்யவும் மனுவில் பள்ளிகள் கோரிக்கை வைத்திருந்தன.

இந்த வழக்குகள் நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் பள்ளிகள் தரப்பு வாதங்களை ஏற்று, பள்ளிகளை ஆட்சேபங்களை கேட்காமல் உபரி ஆசிரியர்களை இடமாற்றம் செய்த அரசின் உத்தரவிற்கு தடைவிதித்து உத்தரவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com