தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் முழுநேர நாடகக் கலை படிப்பு.. விண்ணப்பங்கள் வரவேற்பு
தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் 2020 – 2021 ஆம் ஆண்டுக்கான முழுநேரப் பட்டப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இங்கு ஒருங்கிணைந்த 5 ஆண்டு முதுகலை, முதுநிலை மற்றும் முதுஅறிவியல் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
படிப்புகள்:
தமிழ், வரலாறு பாடப்பிரிவுகளில் ஒருங்கிணைந்த ஐந்து ஆண்டு படிப்புகளும், தமிழ், வரலாறு மற்றும் தொல்லியல், மொழியியல், மெய்யியல் பாடப்பிரிவுகளில் முதுகலை படிப்புகளும் நாடகம் மற்றும் அரங்கக்கலையில் முதுநிலை நிகழ்த்துக்கலை படிப்பும், சுற்றுச்சூழல் அறிவியல் பாடத்தில் முதுஅறிவியல் படிப்பும் பயிற்றுவிக்கப்படுகின்றன.
சிற்பம், இசை நாடகம், ஓலைச்சுவடி, அரிய கையெழுத்துச் சுவடி, கல்வெட்டு மற்றும் தொல்லியல், கடல்சார் வரலாறு, அயல்நாட்டுத் தமிழ்க்கல்வி, மொழிபெயர்ப்பு, அகராதியியல், சமூக அறிவியல், அறிவியல் தமிழ், கல்வியியல், இலக்கியம் உள்ளிட்ட 25 வகையான பாடப்பிரிவுகளில் எம்ஃபில் படிப்புகள் உள்ளன.
பட்டயப்படிப்புகள்:
மொழிபெயர்ப்பியலில் இரண்டு ஆண்டு முதுநிலைப் பட்டப்படிப்பும், சைவ சித்தாந்தம், யோகா, கணிப்பொறிப் பயன்பாடு பாடப்பிரிவுகளில் ஓர் ஆண்டு பட்டயப்படிப்பும், சிற்பத்தில் மூன்று ஆண்டு பட்டயப்படிப்பும், இசை பரதநாட்டியம், தெலுங்கு, சிற்பம் ஆகியவற்றில் ஓர் ஆண்டு சான்றிதழ் படிப்புகளும் வழங்கப்படுகின்றன. பட்டயம் மற்றும் சான்றிதழ் படிப்புகளுக்கு பிளஸ் டூ மற்றும் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும். மொழிபெயர்ப்பியல் படிப்புக்கு மட்டும் ஏதாவது ஒரு பாடத்தில் முதுநிலைப் படிப்பை முடித்திருக்கவேண்டும்.
கல்வித்தகுதி:
ஒருங்கிணைந்து ஐந்து ஆண்டு படிப்புகளுக்கு பிளஸ் டூ தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும். முதுகலை மற்றும் முதுஅறிவியல் படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் ஏதாவது ஓர் இளநிலைப் பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும். சுற்றுச்சூழல் அறிவியல் படிப்பில் சேர ஏதாவது ஓர் இளநிலை அறிவியல் படிப்பில் தேர்ச்சி பெற்றிருப்பது அவசியம்.
எம்ஃபில் படிப்பில் சேர முதுநிலைப் படிப்பில் 55 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்கவேண்டும். பல்கலைக்கழக மானியக்குழு விதிமுறைப்படி விலக்கு உண்டு.
விண்ணப்பிக்கும் முறை:
ஆன்லைன் மற்றும் அஞ்சல்வழியில் விண்ணப்பிக்கலாம். இணையதளத்தில் விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். விண்ணப்பக் கட்டணம், கட்டணம் செலுத்தும் முறை உள்ளிட்ட கூடுதல் தகவல்களை பல்கலைக்கழக இணையதளம் மூலம் தெரிந்துகொள்ளவேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்கள்:
ஒருங்கிணைந்த முதுநிலைப் படிப்புகளுக்கு: 14.8.2020
முதுகலை, பட்டயம் உள்ளிட்ட படிப்புகளுக்கு: 31.8.2020
விவரங்களுக்கு: www.tamiluniversity.ac.in