ஜிஎஸ்டி வரி விதிப்பு எதிரொலி: புதிதாக ஒருலட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக வாய்ப்பு
சரக்குகள் மற்றும் சேவை வரிவிதிப்பு முறை அமலாவதால் உடனடியாக ஒரு லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாகக் கருதப்படுகிறது.
சுதந்திரத்துக்கு பிறகான நாட்டின் மிகப்பெரிய வரி சீர்திருத்தமாகக் கருதப்படும் ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறை நாடு முழுவதும் ஜூலை ஒன்றாம் தேதி முதல் அமல்படுத்தத் திட்டமிட்டுள்ளது. புதிய வரிவிதிப்பு முறை அமலாவதால் உடனடியாக ஒரு லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் வாய்ப்பிருப்பதாக நம்பிக்கை விதைக்கிறார்கள் வேலைவாய்ப்புத் துறை சார்ந்தவர்கள். இதுகுறித்து பேசிய இந்திய பணியாளர் கூட்டமைப்புகளின் தலைவர் ரிதுபர்ணா சக்கரவர்த்தி, ஜிஎஸ்டி முறை அமலாவதால் பொருட்கள் கொள்முதல் மற்றும் விற்பனை அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இயல்பாகவே மக்களிடம் பணப்புழக்கம் அதிகரிக்கும். இந்த பணப்புழக்கம் கணிக்கக் கூடியதகாவும், லாபம் பெருகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் நிதி சார்ந்த சேவைகள் வழங்கும் துறையில் உடனடியாக வேலைவாய்ப்புகள் உருவாகும் என்கிறார். ஜிஎஸ்டி வரிவிதிப்பு அமல்படுத்தப்படுவதால் ஆண்டுதோறும் 10 முதல் 13 சதவீதம் அதிகப்படியான வேலைவாய்ப்புகள் உருவாகும் என்று எதிர்பார்ப்பதாகவும் ரிதுபர்ணா கூறுகிறார்.
ஜிஎஸ்டி அமலாவதால் வணிக நடைமுறைகள் எளிதாகும் என்கிறார் வேலைவாய்ப்பு சார்ந்த சேவைகள் வழங்கும் மான்ஸ்டர் இணையதளத்தின் ஆசியா-பசிபிக் பகுதி நிர்வாக அதிகாரி சஞ்சய் மோடி. மேலும், ஜிஎஸ்டி போன்ற வெளிப்படையான வரிவிதிப்பால் அந்நிய முதலீடு அதிகரித்து, அரசின் செயல்திட்டங்கள் வேகமெடுக்கும். இதனால், புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் என்றும் சஞ்சய் மோடி கணிக்கிறார்.