பத்தாம் வகுப்பு இருளர் மாணவர்கள் பள்ளிக்கு செல்லாமல் கூலி வேலைக்குச் செல்லும் கொடூரம்

பத்தாம் வகுப்பு இருளர் மாணவர்கள் பள்ளிக்கு செல்லாமல் கூலி வேலைக்குச் செல்லும் கொடூரம்
பத்தாம் வகுப்பு இருளர் மாணவர்கள் பள்ளிக்கு செல்லாமல் கூலி வேலைக்குச் செல்லும் கொடூரம்

இருளர் இனமக்களின் தொடர் வறுமை காரணமாக பத்தாம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு செல்லாமல் கூலி வேலைக்கு செல்லும் அவலம் உள்ளது.


காஞ்சிபுரம் ஓரிக்கை பாரதிதாசன் நகரில் சுமார் 25-க்கும் மேற்பட்ட இருளர் இன குடும்பங்கள் வசித்து வருகிறார்கள். இதில் சுமார் 30க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் அருகில் உள்ள ஆதிதிராவிடர் நடுநிலைப் பள்ளியிலும் மேல்நிலைப் பள்ளியிலும் படித்து வருகிறார்கள்.

இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் பள்ளிகள் மூடப்பட்டன. கொரோனா தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில் பள்ளிகள் திறக்கப்படுமா என்பதே கேள்விக்குறியாக இருந்தது. இதையடுத்து 2020-21 ஆம் கல்வியாண்டுக்கான பாடங்கள் ஆன்-லைன் வழியாகவும், கல்வி தொலைக்காட்சி மற்றும் யூ-டியூப் மூலமாகவும் நடத்தப்பட்டு வந்தன.


ஆனால் மேற்கண்ட வழியில் கற்பிக்கப்பட்டு வந்த நடைமுறையில் இருளர் இன மாணவ மாணவிகள் கல்வி கற்க இயலவில்லை என பெற்றோர்கள் வேதனை அடைகிறார்கள். இது ஒருபுறமிருக்க தொடர் ஊரடங்கு காரணமாக எந்த ஒரு வேலையும் கிடைக்காமல் அப்பகுதியில் வசிக்கும் இருளர்களின் ஒட்டுமொத்த குடும்பமும் வறுமையின் பிடியில் சிக்கித் தவித்து வந்தனர். மேலும் பள்ளிகளுக்கு தொடர் விடுமுறையால், பள்ளி செல்லும் மாணவ மாணவிகள் கூலி தொழிலாளியாக வேலைக்குச் சென்றார்கள். இவர்களில் 3 மாணவர்கள் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார்கள்.

தற்போது 10, 12 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நெருங்கும் நிலையில் பள்ளிகளை திறக்க கல்வித்துறை முடிவு செய்தது. அதன்படி இன்று 10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்காக பள்ளிகள் திறக்கப்பட்டன. 10 மாத காலத்துக்கு பிறகு இன்று பள்ளிகள் திறப்பதால் மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் பள்ளிக்கு வருகை தந்தனர். ஆனால் வறுமை காரணமாக வேறு வழியின்றி மூன்று மாணவர்கள் பள்ளிக்கு செல்லாமல் கூலி வேலைக்கு சென்று இருக்கிறார்கள்.


மேலும் இப்பகுதியில் உள்ள எட்டாம் வகுப்பு மற்றும் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவர்களில் இடைநிற்றல் அதிகரித்து, அவர்கள் படிக்கும் ஆதிதிராவிடர் நலப்பள்ளியில் இருந்து மாற்றுச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது மாணவர்களின் பெற்றோர்களை மேலும் கலக்கமடைய வைத்துள்ளது.

இதுகுறித்து ஆதிதிராவிடர் நலத்துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு கேட்டபோது சம்பந்தப்பட்ட மாணவர்களின் பெற்றோர்கள் பிழைப்புக்காக மற்றொரு மாவட்டத்திற்கு மாறிக்கொண்டே இருக்கிறார்கள் அதன் காரணமாகவே தான் அவர்கள் மாற்றுச் சான்றிதழை கேட்டு வாங்கிக் கொள்கிறார்கள் மேலும் வேறொரு பள்ளியில் சேர்ப்பதற்காக மாற்றுச்சான்றிதழ் வாங்குகிறார்கள் என கூறுகிறார்கள்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com