நாட்டில் 22% பள்ளிகளில்தான் இணைய வசதி; இடைநிற்றல் நிலவரம்: UDISE+ ஆய்வறிக்கை 2019-20 ஷாக்

நாட்டில் 22% பள்ளிகளில்தான் இணைய வசதி; இடைநிற்றல் நிலவரம்: UDISE+ ஆய்வறிக்கை 2019-20 ஷாக்
நாட்டில் 22% பள்ளிகளில்தான் இணைய வசதி; இடைநிற்றல் நிலவரம்: UDISE+ ஆய்வறிக்கை 2019-20 ஷாக்

இந்திய அளவில் பள்ளி மாணவிகளை விட மாணவர்களின் இடைநிற்றல் விகிதம் அதிகம், இந்தியாவில் 22% பள்ளிகளில் மட்டுமே இணைய வசதிகள் என்பன உள்ளிட்ட அதிர்வுக்குரிய தரவுகளுடன் வெளியாகியிருக்கிறது மத்திய அரசின் 'கல்வி பிளஸ்' ஆய்வறிக்கை.

இந்திய பள்ளிக் கல்வித் துறையின் 2019-20 காலகட்டத்தின் 'கல்வி ப்ளஸ்ஸுக்கான ஒருங்கிணைந்த தகவல் முறை' (United Information System for Education Plus - UDISE+) ஆய்வறிக்கையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இந்த 'கல்வி பிளஸ்' ஆய்வறிக்கையின் படி, 2019-20-ல் பள்ளிக் கல்வியில் மொத்த மாணவர் சேர்க்கை விகிதம் அனைத்து நிலைகளிலும் கூடியுள்ளது. மாணவர் - ஆசிரியர் விகிதமும் மேம்பட்டுள்ளது. ஆரம்பக் கல்வி முதல் மேல்நிலை கல்வி வரை மாணவிகள் சேர்க்கை 12.08 கோடிக்கு அதிகமாக உள்ளது. முந்தைய 2018-19 கல்வியாண்டுடன் ஒப்பிடுகையில், 14.08 லட்சம் பேர் அதிகமாக சேர்ந்துள்ளனர்.

2012-13 மற்றும் 2019-20ம் ஆண்டுக்கு இடையே உயர்நிலை மற்றும் மேல்நிலை வகுப்புகளில் பாலின சமநிலை அட்டவணையும் மேம்பட்டுள்ளது. 2019-20 கல்வியாண்டில் பல பள்ளிகளில், மின்சாரம், கம்ப்யூட்டர்கள், இணையதளம் ஆகியவற்றின் செயல்பாடு முந்தைய ஆண்டைவிட அதிகரித்துள்ளது. மற்றொரு முக்கிய முன்னேற்றமாக, பல பள்ளிகளில் கை கழுவும் வசதி காணப்படுகிறது. 2019-20ம் கல்வியாண்டில் 90 சதவீதத்துக்கும் அதிகமான பள்ளிகளில் கை கழுவும் வசதி உள்ளது. இது கடந்த 2012-13ம் ஆண்டில் 36.3 சதவீதமாக இருந்தது.

இதுபோன்ற சாதகமான அம்சங்கள் நிறைய இருந்தாலும், பாதக நிலையும் இந்த ஆய்வறிக்கை மூலம் தெரியவந்துள்ளது. அவற்றின் இதர முக்கிய அம்சங்கள்:

* 2019-20 கல்வியாண்டில் 1 முதல் 5 வரையிலான ஆரம்பப் பள்ளி வகுப்புகளில் இருந்து அதிக எண்ணிக்கையிலான ஆண் மாணாக்கர் பள்ளியை விட்டு வெளியேறி இருக்கின்றனர். அதாவது மாணவர்களின் இடைநிற்றல் (ட்ராப்-அவுட்) அதிகரித்துள்ளது.

* நாட்டில் 15 லட்சத்துக்கும் மேற்பட்ட பள்ளிகள், கிட்டத்தட்ட 97 லட்சம் ஆசிரியர்கள் மற்றும் 26.5 கோடிக்கும் மேற்பட்ட ஆரம்ப கல்வி முதல் உயர்நிலை கல்வி வரை பயிலும் மாணவர்களுடன் இந்தியப் பள்ளிக் கல்வி முறை உலகிலேயே மிகப்பெரிய ஒன்றாக இருந்து வருகிறது என்று பெருமிதம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

* உயர்நிலைப் பள்ளி அளவில் 3.8 கோடிக்கு மேலான மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இவர்களில் 44.3% மாணவர்கள் அரசுப் பள்ளிகளிலும், 20%-க்கும் அதிகமானோர் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும், கிட்டத்தட்ட 35% மாணவர்கள் தனியார் பள்ளிகளிலும் படித்து வருகின்றனர்.

* 2019-20 கல்வியாண்டில் 6-8 வரையிலான நடுநிலைப் பள்ளிகளில் இருந்து பள்ளியை விட்டு வெளியேறிய மாணவிகளின் எண்ணிக்கை, மாணவர்களை விட அதிகமாக இருக்கிறது.

* உயர்நிலைப் பள்ளி வகுப்புகள் அளவில் ஒட்டுமொத்தமாக இடைநிற்றல் விகிதம் 17%-க்கும் அதிகமாக உள்ளது. இதுவே 6 முதல் 8 வரையிலான நடுநிலையில் 1.8 மற்றும் 1 முதல் 5 வரையிலான ஆரம்ப நிலைகளில் 1.5% என்ற விகிதத்தில் உள்ளது.

* ஆரம்ப பள்ளிகளில் மாணவர்களின் இடைநிற்றல் விகிதம் 1.7% ஆகவும், மாணவிகளின் விகிதம் 1.2% ஆகவும் இருக்கிறது.

* இதுவே உயர்நிலைப் பள்ளிகளில் மாணவிகளை விட மாணவர்களின் இடைநிற்றல் விகிதம் அதிகமாக இருந்துள்ளது. மாணவிகளின் இடைநிற்றல் 16.3% ஆகவும், மாணவர்களின் இடைநிற்றல் 18.3% ஆகவும் இருந்துள்ளனர்.

* நாட்டில் கிட்டத்தட்ட 30% மாணவர்கள் உயர்நிலைப் பள்ளிகளில் இருந்து மேல்நிலை பள்ளிகளுக்கு மாறவில்லை என்பது தெரியவந்துள்ளது.

தமிழ்நாட்டில் இடைநிற்றல் விகிதம் 9.6%

* இந்திய அளவில் உயர்நிலைப் பள்ளிகள் அளவில் (9 மற்றும் 10ஆம் வகுப்புகள்) மாணவர்களின் ஒட்டுமொத்த இடைநிற்றல் விகிதம் 17.3% ஆக இருக்கும் நிலையில் திரிபுரா, சிக்கிம், நாகாலாந்து, மேகாலயா, மத்தியப் பிரதேசம், அசாம் மற்றும் அருணாச்சல பிரதேசம் உள்ளிட்ட 19 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இந்திய அளவிலான விகிதத்தை விட அதிகமாக உள்ளன. இந்த மாநிலங்களில் இடைநிற்றல் விகிதம் 25%-க்கும் அதிகமாக இருக்கிறது. இதில் நான்கு மாநிலங்களில் 30%-க்கும் அதிகமாக உள்ளன.

* வடகிழக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளைச் சேர்ந்த பெரும்பான்மையான மாநிலங்களில்தான் பள்ளி மாணவர்களின் இடைநிற்றல் விகிதம் அதிகமாக உள்ளது.

* தேசிய தலைநகர் டெல்லியில் 20%-க்கும் அதிகமாக இடைநிற்றல் விகிதம் உள்ளது.

* பஞ்சாப் மாநிலத்தில்தான் மிகக் குறைந்த அளவில் மாணவர்களின் இடைநிற்றல் காணப்படுகிறது. இங்கு பள்ளியை விட்டு மாணவர்களின் இடைநிற்றல் விகிதம் 1.5% மட்டுமே.

* இதர மாநிலங்களில் பள்ளி மாணவர்களின் இடைநிற்றல் விகிதம்: சண்டிகர் (9.5%), கேரளா (8%), மணிப்பூர் (9.6%), தமிழ்நாடு (9.6%) மற்றும் உத்தராகண்ட் (9.8%).

* ஒட்டுமொத்தமாக, இந்தியாவில் பள்ளி மாணாக்கரின் இடைநிற்றல் விகிதத்தை எடுத்துக்கொண்டால், மாணவர்களை விட மாணவிகளின் இடைநிற்றல் 2% குறைவாக உள்ளது.

இந்தியாவில் 22% பள்ளிகளில் மட்டுமே இணைய வசதிகள்:

* 2019-20 கல்வியாண்டில் இந்தியாவில் 22% பள்ளிகளில் மட்டுமே இணைய வசதிகள் இருந்தன என்று அதிர்ச்சியான தகவலும் கல்வி பிளஸ் ஆய்வறிக்கை மூலம் தெரியவந்துள்ளது.

* இந்திய அளவில் 12%-க்கும் குறைவான அரசுப் பள்ளிகளே இணைய வசதிகளையும், 30%-க்கும் குறைவான கணினிகளையும் கொண்டுள்ளன.

* கொரோனா பேரிடர் காரணமாக, ஆன்லைன் கல்வியை இந்தியா முழுவதும் ஊக்கப்படுத்தி வரும் நிலையில், இந்தத் தகவல் பெரும்பாலான பள்ளிகளில் ஆன்லைன் வசதி இல்லை என்ற அதிர்ச்சி நிலவரத்தை வெளிப்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com