“பள்ளிகளை மீண்டும் திறக்கவேண்டும்”: ஐஐடி பேராசிரியர்கள், மருத்துவர்கள்,பெற்றோர்கள் கடிதம்
பள்ளிகளை மீண்டும் திறக்கக் கோரி மகாராஷ்டிரா, டெல்லி, கர்நாடக மாநில முதல்வர்களுக்கு, பல ஐஐடி பேராசிரியர்கள், மருத்துவர்கள் மற்றும் பெற்றோர்கள் இணைந்து கடிதம் எழுதியுள்ளனர்.
ஐஐடி பாம்பேவின் கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறையில் பணிபுரியும் பேராசிரியர் பாஸ்கரன் ராமன், மகாராஷ்டிரா, டெல்லி மற்றும் கர்நாடக முதல்வர்கள், பள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்து ஒரு பணிக்குழுவை அமைக்குமாறு வலியுறுத்தினார். இந்த கடிதத்தை ஐஐடி பாம்பே, ஐஐடி டெல்லி பேராசிரியர்கள், பல்வேறு மருத்துவர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் மகாராஷ்டிரா, டெல்லி மற்றும் கர்நாடகா மாநிலங்களைச் சேர்ந்த பெற்றோர்களும் இணைந்து எழுதியுள்ளனர்.
இந்த கடிதத்தில், “கடந்த 16 மாதங்களாக பள்ளிகள் பெருமளவில் மூடப்பட்டுள்ளன. இதனால் கற்றல் மற்றும் வளர்ச்சி இழப்புகள் அதிகரித்து வருகின்றன, அதே நேரத்தில் அறிவியல் ஆதாரங்கள் மற்றும் பாதுகாப்புகளுடன் மீண்டும் பள்ளிகளை திறப்பதற்கான சாத்தியம் குறித்த அறிக்கையை இந்த கடிதத்துடன் இணைத்துள்ளோம். கொரோனா 'ஜீரோ கேஸ்' என்பது சாத்தியமில்லை, ஆனால் பொருத்தமான நடவடிக்கைகளுடன் அபாயங்களை எதிர்கொள்வதற்கான அணுகுமுறை இப்போது இருக்க வேண்டும். பள்ளிகளை ஒரே நாளில் திறக்க முடியாது. இதற்கு அனைத்து நிலைகளிலும், குறிப்பாக உள்ளூர் நிலைமைகள் குறித்து கவனமாக திட்டமிடல் தேவைப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது