”ஐஐடி சீட் கிடைக்கும்; ஆனால் கல்லூரி சேர பணமில்லை” திருச்சி அரசுப் பள்ளி மாணவர் வேதனை

”ஐஐடி சீட் கிடைக்கும்; ஆனால் கல்லூரி சேர பணமில்லை” திருச்சி அரசுப் பள்ளி மாணவர் வேதனை
”ஐஐடி சீட் கிடைக்கும்; ஆனால் கல்லூரி சேர பணமில்லை” திருச்சி அரசுப் பள்ளி மாணவர் வேதனை

ஜெ.இ.இ. தேர்வில் தேர்ச்சி பெற்ற அரசுப் பள்ளி மாணவனொருவர், ஐஐடி கலந்தாய்வுக்கு பிறகு கல்வி கட்டணம் கட்ட முடியாதென நினைத்து அரசு உதவியை கோரி நிற்கிறார்.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வரை ஐஐடி பற்றிக் கேள்விப்படாத திருச்சி துவரங்குறிச்சியை அடுத்த கரடிப்பட்டியை சேர்ந்த 17 வயது மாணவன் அருண் குமார், தனது ஊரிலிருந்து 3 கி.மீ தூரம் தொலைவிலிருந்த சேவல்பட்டி அரசு பள்ளியில் 12ம் வகுப்பு பயின்றிருந்தார். அப்போது திருச்சி தேசிய தொழில்நுட்ப கழகத்தை சேர்ந்த மாணவர்கள் அரசு பள்ளியில் பயிலும் மாணவர்கள் ஐஐடி, என்ஐடி உள்ளிட்ட நிறுவனங்களில் கல்வி பயில முறையான பயிற்சி தேவை அந்த பயிற்சிகளை நாங்கள் தருகிறோம் என்று நேரடியாக வந்து மாணவர்களிடம் பேசினர்.

இதற்காக திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு, திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் 11, 12 -ம் வகுப்பு மாணவர்களுக்கு வார இறுதி நாட்களில் தனியாக சிறப்பு பயிற்சிகள் நடத்த ஏற்பாடு செய்து தந்திருந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த 16 மாதங்களுக்கு மேலாக கோவிட் பெருந்தொற்று காலத்தினால் மாணவர்கள் நேரடியாக வரமுடியாத நிலை இருந்துவந்தது. அதையும் சமாளிக்க, ஆட்சியர் இணையதளம் மூலமாக இவர்களுக்கு பயிற்சி வகுப்புகள் நடத்த ஏற்பாடு செய்திருந்தார். அதில் பயின்ற மாணவன்தான் அருண்குமார்.

பின்னர் நுழைவுத்தேர்வு எழுதி தற்பொழுது ஐஐடி சென்னையில் கல்வி பயில இவருக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறாது. பன்னிரெண்டாம் வகுப்பில் 551 மதிப்பெண்கள் பெற்ற மாணவர் அருண், ஐஐடியில் கல்வி பயில நுழைவு தேர்வு எழுதியுள்ளார். அந்த ஜெ.இ.இ. தேர்வில், 17,061-ம் இடமும்; ஜெ.இ.இ. அட்வான்ஸ்ல் தேர்வில் 12,175 இடமும் பெற்றார். இவருக்கு வருகிற 27-ஆம் தேதி கலந்தாய்வு நடைபெற உள்ளது. அகில இந்திய தரவரிசையில் மாணவர் அருண், 12,175 இடத்தையும் மற்றும் ஓ.பி.சி.-என்.சி.எல். தரவரிசையில் 2,503 இடம் பெற்றிருக்கிறார். இவருக்கு தேர்வு முறையைத் நுழைவு தேர்வு எழுத திருச்சி தேசிய தொழில்நுட்ப கழக மாணவர்கள் பயிற்சி கொடுத்து உதவி புரிந்துள்ளனர். அருண்குமார் கலந்தாய்வு முடிந்து ஐஐடியில் கல்வி பயில காத்திருக்கிறார்.

இந்நிலையில் ஐஐடியில் பிஇ, பிடெக் பிரிவில் இடம் கிடைத்தாலும் அதற்கான கல்வி கட்டணத்தை செலுத்த வசதியில்லாமல் தவிப்பதாக கூறுகின்றார் மாணவர் அருண்குமார். இவரது தந்தை கூலித் தொழில் செய்து வருவதாகவும், மிகவும் சிரமப்பப்ட்டுதான் பத்தாயிரம் ரூபாய்க்கு செல்போன் வாங்கி கொடுத்ததாகவும் கூறும் அருண்குமார், இதற்கு மேலும் பொருளாதார ரீதியாக கல்லூரி கட்டணம் செலுத்த தன்னிடம் வசதியில்லை என்கிறார். மாணவரின் குடும்பம் மிகவும் பின்தங்கிய சூழலில் உள்ள நிலையில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான செமஸ்டர் கட்டணத்தை செலுத்துவதில் அவர்களுக்கு மிகுந்த சிக்கல் உள்ளது.

அவர்களின் மாத வருமானமே குறைவு என்பதால் சில நாட்களில் சேர்க்கைக்கான கவுன்சிலிங் தொடங்கும் நிலையில் அரசுப்பள்ளி மாணவனின் கனவை நிறைவேற்ற ஊக்கத்தொகை அளிக்க குடும்பத்தினர் அரசிடம் உதவி கோருகின்றனர். மாணவனின் கனவை நிஜமாக்க, முதல் நுழைவு கட்டணத்தை கட்ட மாவட்ட ஆட்சியர் உதவி தானே ஏற்பதாக கூறியுள்ளார்.

தான் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் தரவரிசையில் ஐஐடியில் நிச்சயம் இடம் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் காத்திருக்கிறார் மாணவர் அருண். இடம் கிடைத்தவுடன் கல்விக் கட்டணத்தை படித்து முடிக்கும் வரை எப்படி செலுத்தப் போகிறோம் என்ற மனதில் ஒரு தயக்கமும் அவர் கண்முன் நிழலாடுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com